எல்லையோரக் கிராமங்களை மேம்படுத்த ரூ.1,100 கோடி ஒதுக்கீடு

எல்லையோரக் கிராமங்களை மேம்படுத்துவதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற எல்லையோர கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற எல்லையோர கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.

எல்லையோரக் கிராமங்களை மேம்படுத்துவதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 61 மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான உயர் நிலைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 25 மாவட்ட ஆட்சியர்கள், உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்லையோர கிராமங்களை மேம்படுத்துவதில் தங்களது மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பன குறித்து அருணாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அப்போது ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தனர்.
அதைக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள குறிப்பிட்ட சில பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
எல்லைப் பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், அந்தத் திட்டங்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த அதிகாரிகள் பங்களிக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த நிதியாண்டில் எல்லையோர கிராம மேம்பாட்டுக்காக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் குறிப்பிட்டார். 
மேலும், 61 மாதிரி கிராமங்களை உருவாக்க ரூ.126 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com