சசி தரூரின் ஹிந்து பாகிஸ்தான்' பேச்சால் சர்ச்சை: ராகுல் மன்னிப்புக் கேட்க பாஜக வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக' மாறி விடும் என்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சசி தரூரின் ஹிந்து பாகிஸ்தான்' பேச்சால் சர்ச்சை: ராகுல் மன்னிப்புக் கேட்க பாஜக வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக' மாறி விடும் என்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்சித் தலைவர்கள் வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
சசி தரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக தனது மக்களவைத் தொகுதியான திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்துவிடும். பாகிஸ்தானைப் போலவே சிறுபான்மையினர் உரிமைகளை மதிக்காத ஒரு புதிய நாடாக இந்தியா உருவாகும். சிறுபான்மையினரின் சமஉரிமைகள் பறிக்கப்படும். காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆஸாத் ஆகியோர் எதற்காக போராடி சுதந்திரம் பெற்றார்களோ, அது இல்லாமல் போய்விடும். மொத்தத்தில் ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டு, இந்தியா என்பது ஹிந்து பாகிஸ்தானாக' உருவெடுக்கும்' என்று பேசினார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
எனினும் தனது கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், முகநூலில் சசி தரூர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமான ஹிந்து ராஜ்ஜியம் என்பதும் பாகிஸ்தானின் பிரதிபிம்பம்தான்' என்று தெரிவித்தார்.
ராகுல் மன்னிப்புக் கோர வேண்டும்': தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா இது தொடர்பாக கூறியதாவது:
சசி தரூர் இந்திய ஜனநாயகத்தின் மீதும் ஹிந்துகள் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளார். நமது அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை சசி தரூர் குறைத்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மீதான வெறுப்புணர்வு உச்சமடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இதுபோல பேசி வருகின்றனர். தாய் நாட்டின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசி, சசி தரூர் தனக்குத்தானே அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தங்கள் கட்சித் தலைவரின் கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்பதுடன், காங்கிரஸ் தலைவர் ஏன் இதுபோல தொடர்ந்து பேசி வருகின்றனர் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எச்சரிக்கை: இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் நெறிமுறைகளும், அடிப்படைக் கட்டமைப்புகளும் எவ்வித சவால்களுக்கும் இடம் அளிக்காத வகையில் உறுதிப்படுத்தப்பட்டதாகும். நமது கொள்கைகள் பாகிஸ்தானின் பிரிவினைவாதப் போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வரலாற்றுரீதியாக நமக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். பாஜகவின் வெறுப்புணர்வுக் கொள்கைகளை எதிர்த்துப் பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், பாகிஸ்தானைப் போல மோசமான நிலைக்குச் செல்ல இந்திய ஜனநாயகம் அனுமதிக்காது. 
காங்கிரஸ் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும், பாஜகவின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது சற்று யோசித்து கவனமாக வார்த்தைகளைத் தேர்வு செய்து பேச வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com