தில்லி துணைநிலை ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

தில்லியில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
தில்லி துணைநிலை ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

தில்லியில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
தனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது; தான்தான் சூப்பர் மேன்' என்ற அணுகுமுறையில் செயல்படும் துணைநிலை ஆளுநர், மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பை கிடங்குகள் குதூப் மினார் உயரத்துக்கு அதிகரித்துள்ளன' என்று நீதிபதிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
தில்லி பால்ஸ்வா, ஓக்லா, காஜிப்பூர் ஆகிய பகுதிகளில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டியது தில்லி அரசின் பொறுப்பா? அல்லது மத்திய அரசின் பொறுப்பா? என்பது குறித்து புதன்கிழமைக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தில்லியில் குப்பைகளை அகற்றுவது சட்டப்படி மாநகராட்சியின் கடமை. அதற்கான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது' என்று தில்லி அரசும், துணைநிலை ஆளுநரும் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த விவகாரத்தில் தில்லி முதல்வரை கொண்டுவர முடியாது. 
மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற துணைநிலை ஆளுநர் இதுவரை 25 கூட்டங்கள் நடத்தியும், இடங்களை நேரில் பார்வையிட்டும் எதுவும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக தில்லி அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. காஜீப்பூர் குப்பை கிடங்கு 65 மீட்டர் உயரத்துக்கு அதிகரித்துள்ளது. இது குதூப்மினார் உயரத்தை விட வெறும் 8 மீட்டர்தான் குறைவு. தில்லியில் குப்பைகள் தேக்கம் அபாயகரத்தை எட்டியுள்ளது. ஆனால், தன்னிடம்தான் அதிகாரம் உள்ளதாகவும், தான்தான் சூப்பர் மேன்' எனக் கூறிக் கொள்ளும் துணைநிலை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மாநகராட்சிகளின் கடமை; என்னை யாரும் நெருங்க முடியாது; நான் எதையும் செய்ய மாட்டேன் என்ற அணுகுமுறையில் அவர் செயல்படுகிறார். இது தனது பணியைத் தட்டிக்கழிக்கும் செயலாகும். நிதிப்பற்றாக்குறை காரணமாக, துணைநிலை ஆளுநரால் வகுக்கப்பட்ட உத்தோபியா நாட்டின் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சிகளால் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தில்லியின் பல்வேறு பகுதிகள் குப்பைக் கிடங்குகளாக மாறிவிட்டன என்று கருத்து தெரிவித்த நீதிபிகள், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகம் வரும் 16-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது' என்று கடந்த 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும், அதிகாரிகள் நியமன அதிகாரத்தை தில்லி அரசுக்கு அளிக்க துணைநிலை ஆளுநர் மறுத்துவிட்டார் என கேஜரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com