புதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தை: நிஃப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை
புதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தை: நிஃப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை


மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 11, 000 புள்ளிகளை கடந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடத் தொடங்கியுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் பங்குச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தன. 
இந்த நிலையில், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் இந்திய நிறுவனப் பங்குகளில் போட்டி போட்டு முதலீட்டை அதிகரித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை பங்கு வர்த்தகத்தில் தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.
வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வெளியான செய்தி, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட நிகழ்வுகள் சுணக்கமாக இருந்த உலக நாடுகளின் பங்குவர்த்தகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியை சந்தித்ததன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவை நிறுவனப் பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. 
மும்பை பங்குச் சந்தையின் எரிசக்தி துறை குறியீட்டெண் 3.07 சதவீதம் ஏற்றம் கண்டது. இதனைத் தொடர்ந்து எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.60 சதவீதம் வரை உயர்ந்தது.
முதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால், வேதாந்தா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 282.48 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 36,548.41 புள்ளிகளை எட்டியது. கடந்த ஐந்து நாள் தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ் 973.86 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 74.90 புள்ளிகள் உயர்ந்து 11,023.20 புள்ளிகளில் நிலைத்து முதலீட்டாளர்களை உற்சாக களிப்பில் ஆழ்த்தியது.

எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு துறை வரையில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 4.42 சதவீதம் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத உச்ச நிலையை தொட்டு முடிவடைந்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் 10,000 கோடி டாலர் சந்தை மதிப்பை மீண்டும் கடந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்தது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கின் விலை 2.61 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய பங்கின் விலை 1.53 சதவீதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கின் விலை 1.10 சதவீதமும் ஏற்றம் கண்டன. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com