பெண்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அத்தகைய அதிகாரத்தை அவர்களுக்கு
பெண்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அத்தகைய அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கும்போது சமூகக் கொடுமைகளைத் தடுக்கும் அரணாக பெண்கள் உருவெடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடி பெண்களுடன் செல்லிடப்பேசி செயலி' வாயிலாக பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர், பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.
கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற பெண்கள், தொழில் சார்ந்த தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். அவற்றைப் பொறுமையாகக் கேட்ட மோடி, சுயஉதவிக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்காக மத்திய அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் அவர்களிடம் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 2.25 கோடி குடும்பங்கள் அதன் மூலம் பயனடைந்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் 5 கோடி பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களில் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
கிராமப் பகுதி மேம்பாட்டில் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு அதிமுக்கியமானது. 
பொதுவாகவே, ஊரகப் புறங்களில் மேற்கொள்ளப்படும் எந்தப் பணிகளாக இருந்தாலும் பெண்களின் ஒத்துழைப்பு இன்றி நடைபெறாது. அது விவசாயமாகட்டும் அல்லது கால்நடை பராமரிப்பு ஆகட்டும், அனைத்துக்குமே பெண்களின் பங்களிப்பு அவசியமாகிறது.
அவர்களிடத்தில் உள்ள ஆற்றலையும், திறமைகளையும் சமூகத்தில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மாறாக, அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலே போதுமானது. குடும்ப அளவிலும், சமூக அளவிலும் நிதியைக் கையாளும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிப்பது அவசியம். 
அது, பெண்களை உறுதியானவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் உருமாற்றும். அவ்வாறு பொருளாதார ரீதியாக அதிகாரம் படைத்த பெண்கள், சமூக அநீதிகளைத் தடுக்கும் அரணாக விளங்குவார்கள்.
ஊரகப் பகுதிகளின் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லை மகளிர் சுயஉதவிக் குழுவினர் நாட்டி வருகின்றனர். புதிய சமூகத்தை உருவாக்கும் வலிமையை அவர்கள் தன்னகத்தே கொண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com