மீன்களில் ஃபார்மலின் பயன்பாடு: சோதனை நடத்த ஒடிஸா முடிவு

மீன்களை பதப்படுத்த ஃபார்மலின்' வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மீன்களை சோதிக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

மீன்களை பதப்படுத்த ஃபார்மலின்' வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மீன்களை சோதிக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஒடிஸா மாநில வேளாண் மற்றும் விலங்குகள் வள மேம்பாட்டு அமைச்சர் பிரதீப் மஹாரதி கூறியதாவது:
மீன்களில் ஃபார்மலின் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும், அஸ்ஸாம் அரசுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து எங்கள் மாநிலத்துக்கு கொண்டுவரப்படும் மீன்களை சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி நிபுணர்கள் குழு கொண்டு முழுமையாக சோதிக்க செய்ய முடிவு செய்துள்ளோம்.
ஃபார்மலின் பயன்பாடு இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில், ஒடிஸா அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மீன்வளத்துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதீப் மஹாரதி கூறினார்.
இதனிடையே, மீன்களில் ஃபார்மலின் பயன்பாடு குறித்து தனது அமைச்சகமும் விசாரணை நடத்தும் என்று ஒடிஸா சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் பிரதாப் ஜெனா கூறியுள்ளார்.
பிணவறைகளில் சடலங்கள் அழுகாமல் இருக்க ஃபார்மலின்' என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பிடிபட்ட மீன்கள் விற்பனை செய்யப்படும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க மீனவர்கள் ஃபார்மலினை ஊசி மூலம் மீன்களில் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மீன்களுக்கு கடந்த 10-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு தடை விதித்து அஸ்ஸாம் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com