யூரியா ஊழல்: துருக்கி நாட்டவருக்கு ரூ.100 கோடி அபராதம்: நரசிம்ம ராவ் உறவினருக்கு சிறை

யூரியா கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.133 கோடி முறைகேடு செய்த வழக்கில் துருக்கி நாட்டவர் இருவருக்கு ரூ.100 கோடி அபராதமும், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து

யூரியா கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.133 கோடி முறைகேடு செய்த வழக்கில் துருக்கி நாட்டவர் இருவருக்கு ரூ.100 கோடி அபராதமும், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் உறவினரும், மத்திய முன்னாள் அமைச்சர் ராம்லகான் சிங்கின் மகனும் அடங்குவர்.
கடந்த 1995-ஆம் ஆண்டில் தேசிய உர நிறுவனத்துக்குத் தேவையான யூரியாவை கர்சன் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதென ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.133 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துருக்கி நாட்டைச் சேர்ந்த கர்சன் நிறுவனத்தின் இயக்குநர்கள் துன்கே அலான்கஸ், சிஹான் கரான்சி, அந்நிறுவனத்தின் இந்தியப்பிரதிநிதி சாம்பசிவ ராவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.கே.ராமகிருஷ்ணன், முன்னாள் நிர்வாக இயக்குநர்கள் தில்பக் சிங் கன்வார், மல்லேசம் கவுட், மத்திய முன்னாள் அமைச்சர் ராம்லகான் சிங் யாதவின் மகன் பிரகாஷ் சந்திர யாதவ், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் உறவினர் சஞ்சீவ ராவ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏறத்தாழ 23 வருடங்கள் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
துருக்கி நாட்டவர் உள்பட 8 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தது. துன்கே அலான்கஸ், சிஹான் கரான்சி ஆகியோருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com