ஆர்எஸ்எஸ், பாஜக கருத்தையே சசி தரூர் பேசியுள்ளார்: சிவசேனை

ஹிந்து தேசம்' அமைப்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கருத்தைத்தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசி தரூர் பிரதிபலித்திருக்கிறார் என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

ஹிந்து தேசம்' அமைப்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கருத்தைத்தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசி தரூர் பிரதிபலித்திருக்கிறார் என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
சசி தரூரின் கருத்து சர்ச்சைக்குரியது என்றால், ராமனே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர நாராயணன் சிங் பேசியதற்காக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மன்னிப்பு கேட்பாரா? என்றும் சிவசேனை வினவியுள்ளது.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்'' என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியிருந்தார். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பாஜக குற்றம்சாட்டிய அதே வேளையில், தரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னா' நாளிதழில், வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமானால், இந்தியா ஹிந்து பாகிஸ்தான்' நாடாக மாறிவிடும் என்று சசி தரூர் கூறியிருக்கிறார். இதை சுருக்கமாகப் பார்த்தோம் எனில், நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ஹிந்து தேசம்' என அறிவிக்கப்படும் என பொருள் கொள்ளலாம்.
இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசி தரூர் வெளிப்படுத்தியிருக்கிறார். தரூரின் கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால், பாஜகவின் மொழியில் தான் சசி தரூர் பேசியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது என பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார். இது ஹிந்துக்களை புண்படுத்தும் கருத்துதான். இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாமா?
காங்கிரஸ் கட்சியால் தான் இந்தியா பிரிந்தது. மத அடையாளத்தின் பெயரால் பாகிஸ்தான் நிறுவப்பட்டது என்றால், ஹிந்துஸ்தான் என்பது ஹிந்து தேசமே.
ஹிந்துஸ்தானை மதச்சார்பற்ற நாடாக அடையாளப்படுத்தி விட்டதாக முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோர் மீது சங்க பரிவார் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. அப்படியானால், அந்த தவறை திருத்தி அமைப்பதற்கு இந்த நாடு பாஜகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்துள்ளது.
முதலாவது வாய்ப்பு வாஜ்பாய் காலத்தில் வழங்கப்பட்டது. தற்போது நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றுதான் நாங்களும் வலியுறுத்துகிறோம் என்று சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com