செப்டம்பரில் இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்திய - அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்திய - அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் நடைபெறவிருந்த அந்தப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ஒத்திவைத்த நிலையில், தற்போது இத்தகைய தகவல் வெளியாகியிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், இரு தரப்புக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்மையில் ரஷியா மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளானது இந்தியாவுக்கு சில சிக்கலை ஏற்படுத்தியது.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதேபோன்று கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஈரானுடனும் சில உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா அவ்விரு நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதித்ததால், இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் எழுந்தது.
இதனிடையே, கடந்த 6-ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்கள் ஜிம் மேட்டிஸ் மற்றும் மைக் போம்பியோ ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த நிகழ்வை ஒத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
ரஷியாவுடனும், ஈரானுடனும் இந்தியா வைத்துள்ள வர்த்தகத் தொடர்பால் அமெரிக்கா அதிருப்தி அடைந்ததாகவும், அதன் காரணமாகவே இத்தகைய முடிவை அந்நாடு எடுத்ததாகவும் ஊகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதைத் திட்டவட்டமாக மறுத்த அமெரிக்கா, தங்களுக்கு இந்தியாவுடன் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com