நிலக்கரி ஊழல்: ஜிண்டால் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு எதிராக
நிலக்கரி ஊழல்: ஜிண்டால் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் வெள்ளிக்கிழமை விசாரித்தார். ஜிண்டால் மீது ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதியன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம், அமர்கோண்டாவில் ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனம் மற்றும் ககான் ஸ்பான்ச் ஐயர்ன் நிறுவனம் ஆகியோருக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா மற்றும் மேலும் 11 நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவர்களில் தாசரி நாராயண ராவ் இறந்து விட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிபதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார். அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜிண்டால் நிறுவன முன்னாள் ஆலோசகர் ஆனந்த் கோயல், நிஹார் ஸ்டாக்ஸ் நிறுவன இயக்குநர் சூர்யநாராயணன், எஸ்ஸார் நிறுவன துணைத் தலைவர் சுஷில் குமார் மாரூ உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதே சமயம், சிபிஐ தரப்பால் குற்றம்சாட்டப்பட்ட, மும்பையைச் சேர்ந்த கே.ஈ. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதன்மை நிதி ஆலோசகர் ராஜீவ் அகர்வால், குர்கானைச் சேர்ந்த கிரீன் இன்ஃப்ரா நிறுவனத்தின் துணைத் தலைவர் சித்தார்த் மதுரா ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லை என்பதால், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கில் தொடர்புடைய தாசரி நாராயண ராவ் இறந்து விட்டதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஜிண்டால் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், நம்பிக்கையை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com