மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தெலுங்கு தேசம் கட்சி தகவல்

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தெலுங்கு தேசம் கட்சி தகவல்

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் லங்கா தினகரன் வெள்ளிக்கிழமை கூறுகையில், மழைக்கால கூட்டத்தொடரில் மோடி அரசுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், பாஜக மற்றும் ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சதி செய்கின்றன. ஆந்திர மக்களை அவர்கள் ஏமாற்றி விட்டனர்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஒய்.எஸ்.செளதரி, எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கடந்த கூட்டத்தொடரைப் போலவே இந்தக் கூட்டத்தொடரிலும் எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம்'' என்று கூறியிருந்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.பி.க்கள் தங்களது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனர். அவர்களது பதவி விலகல் கடிதங்களை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது, அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆகவே, இத்தகைய சூழலில், தங்களது செல்வாக்கையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com