2017ல் பயங்கரவாதத்தால் பலியானோர் 803; சாலைப் பள்ளங்களால் பலியானோர் 3,597

சென்னை - சேலம் 8 வழிச்சாலை தற்போது அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால், இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாலைகளும் வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் அபாயம் உள்ளது.
2017ல் பயங்கரவாதத்தால் பலியானோர் 803; சாலைப் பள்ளங்களால் பலியானோர் 3,597


புது தில்லி: சென்னை - சேலம் 8 வழிச்சாலை தற்போது அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால், இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாலைகளும் வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் பள்ளம் இல்லாத, படுகுழிகள் இல்லாத சாலைகளை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு நமது சாலைகளின் தரம் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பருவ மழை தீவிரமடைந்தால் இந்த பள்ளங்கள்தான் தலையில் கிரீடத்துடன், கையில் பாசக் கயிறை வைத்துக் கொண்டு எமனாகக் காத்திருக்கும்.

சாலைப் பள்ளங்களைப் பற்றி இப்போது சொல்வதற்கு என்னவிருக்கிறது என கேட்பவர்களுக்கு இருக்கிறது ஒரு பகீர் பதில்.

அதாவது கடந்த 2017ம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803 ஆக இருக்கும் நிலையில் சாலையில் இருக்கும் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றல்ல.. இரண்டல்ல 3,597.

இதன் சராசரி என்ன தெரியுமா? இந்தியா முழுவதும் சாலைகளில் இருக்கும் பல்லாங்குழிகளால்  நாள் ஒன்றுக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 10. இது கடந்த 2016ம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.

இதுபோன்ற சாலைப் பள்ளங்களால் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 726 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இப்பது பயங்கரவாதமோ, தீவிரவாதமோ அல்ல என்பதும், போதிய வசதி இல்லாத போக்குவரத்து வசதிகளும், சாலைவசதிகளுமே என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

தரமான சாலைகளைப் போடாமல் ஒப்பந்ததாரர்கள் லஞ்ச லாவண்யத்தில் உழல்வதும், இதுபோன்ற விபத்துகளின் போது, சாலை ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் அஜாக்ரதை போன்ற எளிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

தரமற்ற சாலைகள், மோசமான பராமரிப்பு போன்ற பல்வேறு குற்றங்களின் கீழ் அதிக உயிரிழப்புகள் நேரிடும் போது மோட்டார் வாகன சட்டப்படி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதற்கான மசோதா நிலுவையில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரி கூறுகிறார்.

நாடாளுமன்றம் முடக்கப்படுவதால் இந்த மசோதா இன்னமும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவுகளால் மரணம் ஏற்படும் போது, உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.2 அல்லத ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதையும் சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். ஒரு உயிருக்கு இத்தனை லட்சம் என்று விலை நிர்ணயிப்பது எப்படி? என்ற கேள்வியும் ஒவ்வொருவரின் மனதிலும் எழத்தான் செய்கிறது.

எனவே, புதிய சாலைகளைப் போடும் முன், வடகிழக்குப் பருவ மழை தனது தீவிரத்தைக் காட்டும் முன் மத்திய மற்றும் மாநில போக்குவரத்துத் துறைகள் உரிய கவனம் செலுத்தி சாலைகளில் இருக்கும் பள்ளங்களை உடனடியாக மூடி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது அவசியம் என்பதை உணரும் தருணம் இது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com