வதந்தியால் பொறியாளர் அடித்துக் கொலை: 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்

கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் வதந்தியால், ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அப்பா எங்கே என்று கேட்கும் அவரது 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் கலங்கி நிற்கிறார்கள்.
வதந்தியால் பொறியாளர் அடித்துக் கொலை: 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்

கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் வதந்தியால், ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அப்பா எங்கே என்று கேட்கும் அவரது 18 மாதக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் கலங்கி நிற்கிறார்கள்.

பொறியாளர் முகமது ஆஸம் உஸ்மான்சாப் (32) அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாட்ஸ்-அப் குழு ஒன்றின் நிர்வாகி (அட்மின்) உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பா எங்கே? அப்பா எப்போது வருவார்? என்று கேட்டு அடம்பிடிக்கும் தனது 2 வயது பேரனுக்கு, பொம்மைகளைக் காட்டியும், கதைகளை சொல்லியும் உணவு ஊட்டி வருகிறார் ஆஸம் உஸ்மான்சாப்பின் தந்தை மொஹம்மது உஸ்மான்.

தங்களது மகனும், அவரது நண்பர்களும் ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்படும் விடியோவை ஊடகங்கள் மூலம் பார்த்து மனதளவில் நொறுங்கிப் போயிருக்கும் குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர்.

காட்டாட்சியா நடக்கிறது. மனிதர்களை விட மிருகங்கள் எவ்வளவோ மேல், அவை தங்களுக்கு பசித்தால் மட்டுமே வேட்டையாடும், தேவையின்றி மற்ற விலங்குகளை தாக்குவதில்லை என்கிறார் ஆஸமின் உறவினர்.

மக்களுக்கு என்னதான் ஆனது? ஏன் இப்படி மற்றவர்களைக் கொல்லும் மனப்பான்மை ஏற்பட்டது. என்னதான் படிக்கிறார்கள்? வீட்டை விட்டு வெளியேறவே பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதே என்கிறார்கள் ஆஸமின் உறவினர்கள் கண்ணீரோடு.

ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளை மிகக் கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஆளாக்குகிறார்கள். இந்த நிலைமை வேறு எந்த பிள்ளைக்கும் ஏற்படக் கூடாது. இது தொடர்பாக கர்நாடகா மற்றும் தெலங்கானா அரசுகள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலங்கிய நெஞ்சத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் கூறுகிறார் ஆஸமின் தந்தை.

சம்பவத்தின் பின்னணி
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஆஸம் உஸ்மான்சாப் (28) என்ற மென்பொருள் பொறியாளர், தனது நண்பர்கள் 3 பேருடன் கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மற்றொரு நண்பரை காண்பதற்காக காரில் சில தினங்களுக்கு முன் வந்தனர். பின்னர், அங்கிருந்து ஹைதராபாத்துக்கு மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டனர். 

வழியில் ஒரு சிறிய கிராமத்தில் காரை நிறுத்திய அவர்கள், செல்லிடபேசியில் படங்கள் எடுத்தனர். அத்துடன், அங்கு நின்றிருந்த குழந்தைகளுக்கு அவர்கள் சாக்லெட்டுகள் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த கிராமவாசிகள், நால்வரையும் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கத் தொடங்கினர். அப்போது, நால்வரையும் தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்த ஒருவர், குழந்தை கடத்தல்காரர்கள் எனக் குறிப்பிட்டு வாட்ஸ்-அப்பில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு மேலும் பலர் திரண்டு வந்தனர்.

இதனிடையே, கிராமவாசிகளின் பிடியில் இருந்து நால்வரும் தப்பினர். ஆனால், அவர்களை பின்தொடர்ந்து சென்று மடக்கிய ஒரு கும்பல், கம்புகளாலும் கற்களாலும் கடுமையாகத் தாக்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கும்பலிடம் இருந்து நால்வரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே உஸ்மான்சாப் இறந்துவிட்டார். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் குழு ஒன்றின் நிர்வாகி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, தங்களது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை கர்நாடக முதல்வரின் கவனத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் உஸ்மான்சாப்பின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com