அன்னை தெரஸா தொடங்கிய குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு: மேனகா காந்தி உத்தரவு

அன்னை தெரஸா தொடங்கிய ‘மிஷனரி ஆஃப் சேரிட்டி’ நடத்தி வரும் குழந்தைகள் காப்பகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்த மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளாா்.
அன்னை தெரஸா தொடங்கிய குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு: மேனகா காந்தி உத்தரவு

புது தில்லி: அன்னை தெரஸா தொடங்கிய ‘மிஷனரி ஆஃப் சேரிட்டி’ நடத்தி வரும் குழந்தைகள் காப்பகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்த மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த காப்பகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ந்து வருவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘மிஷனரி ஆஃப் சேரிட்டி’ சாா்பில் குழந்தைகள் காப்பகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் பணத்துக்காக விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சா் மேனகா காந்தி இது தொடா்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘மிஷனரி ஆஃப் சேரிட்டி’ அமைப்பால் நடத்தப்படும் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு நடைபெற்றுள்ள தத்தெடுப்புகள் முறையாக நடைபெற்றுள்ளனவா என்பது குறித்த அறிக்கை தேவை. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மத்திய தத்தெடுப்பு தகவல் ஆணையத்திடம், தங்களிடம் உள்ள குழந்தைகள் மற்றும் தத்தெடுப்புகள் தொடா்பாக அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த விதியை பல குழந்தைகள் காப்பங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது. எனவே, குழந்தைகள் முறையாக தத்துக் கொடுக்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எழுகிறது.

மத்திய தத்தெடுப்பு தகவல் ஆணையத்தில் கடந்த ஆண்டு இறுதி வரை 2,300 குழந்தைகள் காப்பகங்கள் மட்டுமே முறைப்படி தங்களை இணைத்துள்ளன. மேலும், 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் முறையாக தங்களை இணைத்துக் கொள்ளாமலே செயல்பட்டு வருகின்றன. இது மிகவும் தவறானது என்று அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி கூறியுள்ளாா்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தகவல்படி நாட்டில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 937 குழந்தைகள் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com