சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது: கோவில் நிர்வாகம்  திட்டவட்டம்  

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது: கோவில் நிர்வாகம்  திட்டவட்டம்  

புது தில்லி: சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி இந்திய இளையோர் வழக்குரைஞர்கள் சங்கம், மேலும் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்த பொழுது, அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்தது.

ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் 10 வயது முதல் 50 வயது வரை உடைய பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அனைத்து வயதுடைய பெண்களையும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இவர்கள் எழுப்பிய 5 பிரதான கேள்விகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கோருபவர்கள் தங்களது வாதங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முன்வைக்க வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டது. இதுதொடர்பாக புதன்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி இந்த வழக்கானது புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள் கூறியதாவது: 

சபரிமலையில் வழிபாடு நடத்த பெண்களுக்கு சம உரிமையுண்டு. ஆண்களுக்கு இருப்பதைப் போன்றே பெண்களும் வழிபாடு நடத்த முடியும். இறை வழிபாடு என்பது சட்டத்தைப் பொறுத்து தீர்மானிக்க கூடிய ஒன்று கிடையாது. பெண்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்களுக்கு வழிபாடு செய்யும் உரிமையை மறுப்பது என்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.     

இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வியாழன்று உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது. அவர்கள் அப்போது மாதவிடாய் காலத்திலிருப்பதால், அதன் காரணமாக கோவிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும். அத்துடன் இது மதம்  தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிடக் கூடாது.  

இவ்வாறு தேவசம் போர்டு வழக்கறிஞர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com