2,400 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 2,400 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி

நாடு முழுவதும் 2,400 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது இந்தத் தகவலை அரசு கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் முக்கியப் பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக உரிய முடிவுகள் எடுக்கப்படாமல் சில திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. போதிய அதிகாரிகள் இல்லாததே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நாடு முழுவதும் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சிப் பணியில் இருக்கலாம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 4,940 ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கலாம் என்றும் வரம்பு உள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி 1,449 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். ஐபிஎஸ் பணியிடங்களைப் பொருத்தவரை 970 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் இடித்துரைப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மாநிலங்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், கடந்த ஆண்டு இடித்துரைப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களில் தொடர்புடைய 26 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com