நாடாளுமன்றத்தில் நான் பேசினால் பூகம்பம் வெடிக்கும்: 2 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த ராகுல்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி பேசியதை அடுத்து, 2016-இல் அவர் அளித்த பேட்டியை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். 
நாடாளுமன்றத்தில் நான் பேசினால் பூகம்பம் வெடிக்கும்: 2 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த ராகுல்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி பேசியதை அடுத்து, 2016-இல் அவர் அளித்த பேட்டியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி ஆற்றிய உரை உலகளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில், 2 வருடங்களுக்கு முன் 2016-ஆம் ஆண்டு ராகுல் காந்தி ஆற்றிய உரையை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

அன்று:

பிரதமர் மோடி நவம்பர் 8, 2016-இல் இரவு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி டிசம்பர் 9, 2016-இல் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "நாடாளுமன்றத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து என்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வெடிக்கும். பணமதிப்பிழப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் பிரதமரால் அங்கு உட்காரவே முடியாது. உலகெங்கும் உரை நிகழ்த்தி வரும் பிரதமர் மக்களவைக்கு வர தயங்குகிறார். அவருடைய பதற்றத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்" என்று ஆவேசமாக பேசினார். 

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி டிசம்பர் 22, 2016-இல் வாரணாசியில் பேசுகையில்,

"காங்கிரஸில் ஒரு தலைவர் தற்போது உரை நிகழ்த்த பழகி வருகிறார். அவர் பேச தொடங்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பேசதொடங்கியதால் பூகம்பம் வர சாத்தியமில்லை. ஒருவேளை அவர் பேசமால் போயிருந்தால் தேசம் பூகம்பத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிருந்திருக்கும். தற்போது, அதற்கான அச்சுறுத்தல் இல்லை" என்றார். 

இன்று: 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேச கட்சி மக்களவையில் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி உரையாற்றினார். அவர், ஆற்றிய உரை தற்போது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது. 

மக்கள் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தொடங்கி மத்திய அரசுக்கு எதிரான உரையை பட்டியலிட்டு அடுக்கடுக்காக மக்களவை முன் வைத்தார். 

ரஃபேல் விமான விவகாரம் குறித்து பேசும் போது பிரதமர் சிரித்தார். அதை குறிக்கும் வகையில், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் இருக்கிறது. அதனை என்னால் உணர முடிகிறது. அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் உண்மை இல்லை என்று பேசியதெல்லாம் மக்களவையில் உச்சத்தை தொட்டது. தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்த ராகுல், கடைசியில் " நீங்கள் என்னை பப்பு என்று அழைத்து அவமானப்படுத்தலாம். ஆனால், என்னிடம் உங்கள் மீது வெறுப்பு கறை இல்லை. அந்த வெறுப்பை உங்களிடம் அன்பாக திரும்ப அளிக்கிறேன்" என்று கூறிவிட்டு பிரதமர் மோடியை நோக்கி சென்றார். 

பிரதமர் அருகே சென்ற ராகுல் அவரை கட்டியணைத்துக் கொண்டார். பிரதமர் மோடி, முதலில் செய்வறியாது திகைத்தார்.  பிறகு, ராகுலை திரும்ப அழைத்து ஏதோ சிரிப்புடன் கூறி அவருடன கை குலுக்கி முதுகை தட்டிக் கொடுத்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி டாப் கியரில் பயணிக்கிறது.

இவையனைத்தையும் முடித்துவிட்ட ராகுல், இறுதியாக தனது இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் யாரையோ கண்டு கண் சிமிட்டினார். அந்தக் காட்சி அதற்கும் அடுத்த லெவல்.   

இதுவரை, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பப்பு என்ற பெயருடன் கேலி செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை நடத்திய ஒரு உரையில் மொத்த தேசத்தையுமே தன் பக்கம் ஈர்த்துவிட்டார். 

வாக்கு அரசியல் களத்தில் மிக முக்கியமான ஆயுதமே பேச்சு தான். ராகுல் காந்தி இன்று நடத்திய உரையில் மிகவும் ஆவேசத்துடன் அந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். இந்த நிகழ்வு காங்கிரஸுக்கு மிகப் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவராவிட்டாலும் வரும் காலங்களில் ராகுல் காந்தியின் அடுத்தக்கட்ட உரைகள் நிச்சயம் கவனங்களை ஈர்க்கும். அதனை தான் காங்கிரஸுக்காக ராகுல் காந்தி இன்று சம்பாதித்துள்ளார்.  

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. அதனால், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், ராகுல் காந்தியின் இந்த தாக்குதல் அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தத்தில்,  2016-இல் தெரிவித்தது போல், தற்போது பேசுகையில்  பூகம்பம் இல்லாவிடிலும் அந்த அளவிலான சேதத்தை பாஜகவுக்கு ராகுல் காந்தி ஏற்படுத்திவிட்டார். இதனை, தற்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். 


மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com