அதிசயமே அசந்து போகும் செர்ரி: தெற்காசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை

ஆசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை என்று அழைக்கப்படும் செர்ரி என்ற பெண் குழந்தை, பிறந்து சுமார் 128 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளது.
அதிசயமே அசந்து போகும் செர்ரி: தெற்காசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை

ஹைதராபாத்: ஆசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை என்று அழைக்கப்படும் செர்ரி என்ற பெண் குழந்தை, பிறந்து சுமார் 128 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஹைதராபாத்தின் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வெறும் 25 வாரக் கருவாக இருந்த நிலையில், செர்ரியின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தைப்பேறு ஏற்பட்டது. குழந்தை பிறந்த போது உடல் எடை வெறும் 375 கிராம் மட்டுமே இருந்தது.

இவ்வளவு எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது அதிசயம் என்பதால், இந்த குழந்தை அதிசயக் குழந்தை என்றும், தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை என்றும் அழைக்கப்பட்டார்.

சட்டீஸ்கரைச் சேர்ந்த சௌரவ் - நிதிகா தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 முறை கருக்கலைப்பு நேரிட்டு 5வது முறையாக குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவமனையில் செர்ரி என்று பெயரிட்டார்கள்.

குழந்தை பிறந்த போது, மஞ்சள் காமாளை, பால் குடிப்பதில் சிக்கல், நுரையீரல் போதிய வளர்ச்சி அடையாதது போன்ற பல பிரச்னைகள் செர்ரிக்கு இருந்தது.

தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை என்று பெயர் பெற்ற செர்ரியின் உடல்நலனை மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது. வென்டிலேட்டரில் சுமார் 105 நாட்கள் செர்ரி வைக்கப்பட்டிருந்தாள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நன்கு உடல் எடை தேறி தற்போது அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல் எடை 1.980 கிலோ கிராம்.

பல குறைபாடுகளுடன் பிறந்த செர்ரிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். அதன் பயனாக அவரது உடல் எடை நன்கு தேறி வந்தது. 120வது நாளுக்குப் பிறகு அவர் எந்த கருவியின் உதவியும் இன்றி சுவாசிக்க முடியும் என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். 

குழந்தை பிறந்த போது வெறும் 375 கிராமும், 20 செ.மீ. மட்டுமே இருந்தது. ஒருவரின் உள்ளங்கை அளவுக்குத்தான் செர்ரி இருந்தாள். பொதுவாக குழந்தைகள் 2.7 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடையுடன் இருப்பது வழக்கம் என்றார்கள் செர்ரியை தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com