ஆர்டிஐ சட்டத்தை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை பயனற்றதாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்டிஐ சட்டத்தை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை பயனற்றதாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமை தகவல் ஆணையர், இதர தகவல் ஆணையர்களின் ஊதியம், பணி தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவுகளில், இந்தியர்கள் அனைவரும் அரசின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், பாஜக அதனை மறைக்கவே முயற்சி செய்கிறது. மக்களிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் மறைமுக நோக்கமாகும். ஆர்டிஐ சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள திருத்தங்கள், அதனை பயனற்றதாக்குவதற்கான முயற்சிதானே தவிர வேறு எதுமில்லை. மத்திய அரசின் இந்த முயற்சியை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மக்களவையில் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர்கள், மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005இல் இடம்பெறவில்லை. எனவே, அந்த விதிமுறைகளை உருவாக்குவதற்காக அச்சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வது குறித்த முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் ஆணையத்துக்கு நிகரான அந்தஸ்து தகவல் ஆணையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு அமைப்புகளின் பணியும் முற்றிலும் வேறுபட்டதாகும். தேர்தல் ஆணையம், அரசியலமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின் 1-ஆவது உட்பிரிவின்படி அமைக்கப்பட்டதாகும். ஆனால், தலைமை தகவல் ஆணையமும், மாநில தகவல் ஆணையங்களும் ஆர்டிஐ சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டவை.
எனவே, தலைமை தகவல் ஆணையரின் பணிக்காலம் தற்போதுள்ள 5 ஆண்டுகள் என்பதில் மாற்றம் கொண்டுவரவும், தகவல் ஆணையர்களின் ஊதியம், படிகள், பணி நிபந்தனைகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உத்தேச திருத்தங்கள், அனைத்து எம்.பி.க்களின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
தலைமை தகவல் ஆணையத்தின் அந்தஸ்தை மிகவும் குறைக்கும் நோக்கில் ஆர்டிஐ சட்டத்தை திருத்த மத்திய அரசு முயற்சிப்பதாக ஆர்டிஐ ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com