இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஏறத்தாழ15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியின் பலத்தை பரிசோதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இத்தகைய நிகழ்வு நடைபெற உள்ளதால், அதன் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
மக்களவை அலுவல்கள் வெள்ளிக்கிழமை தொடங்கியவுடன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழியப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து அதன் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.
இதனிடையே, விவாதத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கான நேர ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ஆளும் பாஜக 3 மணி நேரம் 33 நிமிடங்கள் விவாதத்தில் பங்கேற்று பேச அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 38 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு முறையே 29 நிமிடங்களும், 27 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சிவசேனை, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் எந்தக் கட்சியின் ஆதரவுமின்றி தனித்து வெற்றிப் பெறுவதற்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை பாஜகவிடம் உள்ளது. இருப்பினும், அக்கட்சிக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் வலிமையை வெளிக்காட்டுவதற்கான நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பாஜகவை வீழ்த்துவதற்காக அண்மைக் காலமாக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் அரசியல் வியூகங்களின் முக்கிய நடவடிக்கையாகவும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளது.
ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகித்தாலும், பாஜகவுடன் சமீபகாலமாக கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிவசேனை கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைப் பொய்யாக்கும் விதமாக அக்கட்சி தீர்மானத்தை எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதேபோன்று, பாஜகவில் உள்ள அதிருப்தி எம்.பி.யான சத்ருஹன் சின்ஹாவும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல முக்கிய கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளன.
மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவோ, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சூசகமாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com