கிராமங்களுக்கு மின்வசதி: வாக்குத் தவறிய காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 2009-ஆம் ஆண்டுக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை
கிராமங்களுக்கு மின்வசதி: வாக்குத் தவறிய காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 2009-ஆம் ஆண்டுக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒரு படி மேலே போய், அனைத்து வீடுகளுக்குமே மின்சார வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.
தற்போது 4 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், அதில் 85 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கெனவே மின்வசதி செய்து கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதம மந்திரி கிராமப்புற மின்சார (செளபாக்யா) திட்டத்தின் கீழ் ரூ.16,320 கோடி செலவில் பலனடைந்த பயனாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் உரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:
பாஜக ஆட்சிக்கு வரும்போது, நாடெங்கிலும் 18,000 கிராமங்கள் மின்சார வசதியின்றி இருந்தன. மின்வசதி ஏற்படுத்தப்படும் என்று முந்தைய அரசுகள் பல வாக்குறுதிகளை அளித்திருந்தன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு, 2005-இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அனைத்து கிராமங்களுக்கும் 2009-க்குள் மின்சார வசதி அளிக்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஒருபடி மேலே போய், அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
மக்கள் நலனுக்கான செயற்பாட்டாளர்கள் என்று தம்மை கருதிக் கொண்டவர்கள், கிராமங்களுக்குச் சென்று மின்சார வசதி குறித்து கேட்டிருந்தால், அதுதொடர்பான ஆய்வறிக்கைகளை தயார் செய்திருந்தால், மக்களின் நிலை குறித்து ஆலோசித்திருந்தால், அந்த வாக்குறுதி நிறைவடைந்திருக்கும்.
வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்படும் என்ற வாக்குறுதி 2010 அல்லது 2011-ஆம் ஆண்டிலாவது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அந்தக் காலகட்டத்தில் உறுதியான தலைவர்கள் இல்லை என்பதால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 
ஆனால், இதே வாக்குறுதியை எங்களது அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி செயல்படுத்த தொடங்கியபோது, அதில் குறை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டன.
இதுதான் ஜனநாயகத்தின் பலம் என நான் நம்புகிறேன். நாம் நல்லது செய்ய முயற்சிக்கும்போது, அதில் குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டப்படுமானால், அதை நாம் திருத்திக் கொள்ள முடியும்.
எதிர்க்கட்சிகளின் பேச்சுகளை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். மின்சார வசதியில்லாத வீடுகளின் எண்ணிக்கை குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம் மீதான விமர்சனமாக நீங்கள் கருதக் கூடாது. 
அந்த விமர்சனம் அவர்களுக்கானது. ஆம், கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் யாரோ, அவர்களுக்கான விமர்சனம் தான் அது. மின்சார வசதியை ஏற்படுத்தாமல், நம்மிடம் விட்டுச் சென்றது அவர்கள்தான். அதை நாம் நடத்தி முடிக்க முயற்சிக்கிறோம்.
நாட்டில் 4 கோடி குடும்பங்களுக்கு மின்வசதி இல்லையென்றால், அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றோ, மோடி அரசு இணைப்பை துண்டித்து விட்டது என்றோ அர்த்தமல்ல. அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இதுவரை அங்கு இல்லை. தற்போது, மின்சார வசதிகளை கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை நாம் உருவாக்கி வருகிறோம் என்றார் மோடி.
12 மணி நேர வாழ்க்கை
கிராமங்களில் மின்வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை பிரதமர் மோடி விவரித்தார். 
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நாம் அனைவரும், நேரத்தை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஆனால், ஒரு நாளில், 12 மணி நேரத்தை குறைத்துவிட்டால் மக்கள் என்ன செய்ய முடியும்? உங்களது பணிகளை நீங்கள் செய்துமுடிக்க முடியாது.
குக்கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இதுபோன்ற வாழ்க்கையைத்தான் வாழுகின்றனர். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துக்கு இடைப்பட்ட நேரம்தான் அவர்களது வாழ்க்கை. சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே வேலை நேரத்தை அவர்களால் தீர்மானிக்க முடியும் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com