கும்பல் கொலைக்கு வதந்திகளே காரணம்: ராஜ்நாத் சிங்: மாநில அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கும்பல் கொலை சம்பவங்களுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது. 
கும்பல் கொலைக்கு வதந்திகளே காரணம்: ராஜ்நாத் சிங்: மாநில அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கும்பல் கொலை சம்பவங்களுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது. 
அந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதே சமயம், வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது.
மக்களவையில், வியாழக்கிழமை ஜீரோ ஹவர்' எனப்படும் நேரமில்லா நேரத்தில், காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், கும்பல் கொலை தொடர்பான விவாதத்தை எழுப்பினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுவாமி அக்னிவேஷ் கடந்த வாரம் தாக்கப்பட்டது மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சுட்டுரை பக்கத்தில் விஷமிகள் கிண்டல் செய்தது உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துப் பேசுகையில், அண்மைக்காலங்களில் கும்பல் கொலை மூலமாக பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு இது மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
உறுதி செய்யப்படாத செய்திகள் அல்லது பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், மாநில அரசுகளுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2016 மற்றும் நிகழாண்டில் நான் சுற்றறிக்கைகளை அனுப்பினேன். பதிவுகளை கண்காணிக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களையும் நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். கும்பல் கொலை சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்றபோதிலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்க முடியாது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
ஆனால், அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வேணுகோபால் குற்றச்சாட்டு: முன்னதாக, கும்பல் கொலை தொடர்பான விவாதத்தை முன்வைத்தபோது, மத்திய அரசு மீதும், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மீதும் வேணுகோபால் குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:
மாற்றுக் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடைபெறுவதும், கும்பலாக வந்து அடித்துக் கொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மெளனமாக இருக்கிறது.
கும்பல் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை அழைத்து, மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருக்கிறார்.
இதுதான் சட்டத்தின் ஆட்சியா? இவையெல்லாம் மிகவும் தீவிரமான சம்பவங்கள். நாட்டின் ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என இந்த அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். கும்பல் கொலையை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் அரசை வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.
வேணுகோபால் பேசியபோது, பாஜக உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது, கும்பல் கொலை என்பது தேச நலன் சார்ந்த விவகாரம் என்பதால், வேணுகோபால் அதுகுறித்துப் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வேணுகோபால் பேசி முடித்த பின், ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com