தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா: மக்களவையில் நிறைவேறியது

தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்புடன் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா: மக்களவையில் நிறைவேறியது

தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்புடன் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். வங்கிகளில் கடன் வாங்கி விட்டு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயலுவதைத் தடுக்கும் விதமாகவும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலும் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 
மக்களவையில் வியாழக்கிழமை, இந்த மசோதா மீதான விவாதத்தை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தொடக்கி வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது: 
வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியாகும். அவற்றில், ரூ.9.93 லட்சம் கோடி, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொடுக்கப்பட்டதாகும். 
பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் நிதி மோசடி குற்றங்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசோ, நிதி மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. 
வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்ட தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் காங்கிரஸ் கட்சி கண்டெடுத்த மோசடியாளர்கள் ஆவர். அவர்களின் ஊழல்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு உதவி செய்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு சில தினங்களுக்கு முன், சில நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் சட்ட விதிகளை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாற்றினார் என்றார் நிஷிகாந்த் துபே.
அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மத்திய பாஜக அரசின் செயலுக்கும், சொல்லுக்கும் இடையே இடைவெளி காணப்படுகிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
மோடி தன்னை ஒரு பாதுகாவலன் என்று கூறிக் கொள்கிறார். ஆனால், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடியை மட்டும், இந்த சட்டத்தின் மூலம் விசாரிக்க முடியும் என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரே ஒரு தலைமறைவு நிதி மோசடியாளர் மட்டுமே இந்தியா அழைத்துவரப்பட்டார் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது என்றார் அவர்.
அவரைத் தொடர்ந்து, பேசிய அதிமுக எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் பாபு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பிஜு ஜனதா தள எம்.பி. ததாகத ராய், மார்க்சிஸ்ட் எம்.பி. ராஜேஷ், தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே ஆகியோரும் மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே அமலில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன என்று ததாகத ராய் கேள்வி எழுப்பினார்.
பின்னர், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, கடந்த ஏப்ரலில் கொண்டுவரப்பட்ட நிதி மோசடியாளர் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அமையும்.
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல், வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் தொழிலதிபர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்த மசோதா உதவிகரமாக இருக்கும். மேலும், மோசடியாளர்களின் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் வங்கிகளுக்கும், பிற நிதி நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com