நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 533-ஆக குறைந்தது

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில், மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில், மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 533-ஆகக் குறைந்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறின. பிஜு ஜனதா தள எம்.பி. பாய்ஜெயந்த் ஜெய் பாண்டாவின் ராஜிநாமாவை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டது, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் உறுப்பினர் ஜோஸ் கே மணி மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது.
பாய்ஜெயந்த் ஜெய் பாண்டா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பிஜு ஜனதா தளக் கட்சி கடந்த ஜனவரி மாதம் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த பாண்டா, ஜூன் 12-ஆம் தேதி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை புதன்கிழமை சந்தித்த பாண்டா, தனது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அவரது ராஜிநாமாவை சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஜோஸ் கே மணி மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, மக்களவையில் பெரும்பான்மைக்கான அளவீடு 266-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆளும் கட்சி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்பது, கடந்த 15 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். எனினும், மக்களவையில் பெரும்பான்மையுடன் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com