நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு குறித்து மாநில அரசுகளிடம் உறுதிமொழி பெறப்படும்: மாநிலங்களவையில் அமைச்சர் ஜாவடேகர் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பு தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து உறுதி மொழி பெறப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்
நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு குறித்து மாநில அரசுகளிடம் உறுதிமொழி பெறப்படும்: மாநிலங்களவையில் அமைச்சர் ஜாவடேகர் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பு தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து உறுதி மொழி பெறப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மாநிலங்களவை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் வியாழக்கிழமை காலை கூடியதும், பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரம் தொடங்கியது. பூஜ்ய நேரத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் பேசியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வை 1,14, 602 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 24ஆயிரம் பேர் தமிழ் வினாத்தாளைப் பயன்படுத்தி தேர்வை எழுதினர். 49 கேள்விகளுக்கான மொழிபெயர்ப்பில் தவறு ஏற்பட்டது. தற்போது சிபிஎஸ்இ அமைப்பு அந்தக் கேள்விகளின் ஆங்கில மூலத்தை சரிபார்க்க வேண்டும் என்கின்றனர். ஏன் இத்தகைய தெளிவற்ற தன்மை உள்ளது? இந்த விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 196 கருணை மதிப்பெண்களை சிபிஎஸ்இ வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
ஏற்கெனவே மாணவர்கள் இத்தேர்வு விவகாரத்தில் சொல்ல முடியாத பிரச்னைகளை எதிர்கொண்டனர். தமிழக மாணவர்கள் தேர்வு எழுத சிக்கிம் மாநிலத்திற்கும், எர்ணாகுளத்திற்கும் சென்றனர். மேலும், தேர்வு எழுதச் சென்ற மாணவர்களின் மூக்குத்தி, துப்பட்டா ஆகியவற்றை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால், மாணவர்கள் பல்வேறு குழப்பங்களையும், மனப் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ அளித்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) விசாரணைக்கு வர உள்ளது. எனவே, இந்தக் குழப்பத்திற்கு பொறுப்பேற்கும் வகையில், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜிலா சத்யானந்த் எம்.பி. அப்போது, அவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு, இந்த விஷயத்தில் அமைச்சர் ஏதும் சொல்ல விரும்புகிறாரா என்று கேட்டார். அதற்கு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில் அளித்துப் பேசியதாவது:
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இது பற்றி நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை. கடந்த ஆண்டு மொழிபெயர்ப்பு பிரச்னை ஏற்பட்டது. பிற மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலத்திற்கு தனியான வினாத்தாள் இருந்தது. மற்ற மொழிகளுக்கும் தனித் தனியாக இருந்தது. ஆனால், இந்த முறை ஒரே பொது வினாத்தாளாக இருந்தது. மேலும், ஆங்கில வினாத்தாள் மொழி மாற்றத்திற்கான மொழிபெயர்ப்பாளர்களை தமிழ்நாடுஅரசு தரவில்லை. அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநில அரசிடமிருந்தும் வினாத்தாள் மொழிபெயர்ப்பு சரியாக உள்ளதா என்பதற்கான உறுதிமொழியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜாவடேகர்.
அப்போது, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, திருவனந்தபுரம் அல்லது கன்னியாகுமரி குழந்தைகள் ஏன் ராஜஸ்தானுக்கும் பிற மாநிலங்களுக்கும் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
அதற்கு அமைச்சர் ஜாவடேகர், இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், பழைய உத்தரவில் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டில் இருந்து மாணவர்கள் இதுபோன்று வெளி இடங்களுக்குச் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படாது. மாணவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்களோ அங்குள்ள நகரில் தேர்வு எழுத மையம் அமைக்கப்படும். இதனால், இனிமேல் இந்தப் பிரச்னை இருக்காது' என்றார். 
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் வா.மைத்ரேயன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் மீண்டும் தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்த முயன்றனர். 
அப்போது, அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்த விஷயத்தில் நானும் அக்கறை கொண்டுள்ளேன். தற்போது அமைச்சர் அவையில் உறுதிஅளித்துள்ளார். அதன்படி, அந்தந்த மாநில மாணவர்கள் அவர்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டப் பகுதியில் தேர்வு எழுதலாம் என்றும், வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளது' என்றார்.
அப்போது, திருச்சி சிவா, மைத்ரேயன் ஆகியோர் தங்களது கோரிக்கை குறித்து மீண்டும் வலியுறுத்த முயன்றனர். அவர்களை அமைதி காக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com