லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிப்பு

லோக்பால் அமைப்புக்கான பரிசீலனைக் குழுவை கட்டமைப்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உச்ச

லோக்பால் அமைப்புக்கான பரிசீலனைக் குழுவை கட்டமைப்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், சிறப்பு சட்ட நிபுணராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேவேளையில், மக்களவையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு விளக்கமளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, லோக்பால் பரிசீலனைக் குழுவை முதலில் அமைக்க வேண்டும். அதில் உள்ளவர்களே லோக்பால் அமைப்பின் தலைவர் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதற்கு முன்னதாக பரிசீலனைக் குழுவில் எவர் எவர் இடம்பெற வேண்டும் என்பதை பிரதமரை உள்ளடக்கிய லோக்பால் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.
தேர்வுக் குழுவில், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவருடன் சேர்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. கடந்த 2014 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாததே அதற்குக் காரணம். இதனால், லோக்பால் தேர்வுக் குழுவில் அந்த இடத்துக்கு எவரையும் நியமிக்க முடியாத சூழல் இருந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டால், ஆளுங்கட்சிக்கு அடுத்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியின் தலைவரை அந்த இடத்துக்கு தற்காலிகமாக நியமிக்கலாம் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மல்லிகார்ஜுன கார்கே தேர்வுக் குழு உறுப்பினரானார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில் பரிசீலனைக் குழுவை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்த மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி இல்லாதபோது முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரை லோக்பால் தேர்வுக் குழுவில் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு முழு அதிகாரம் கொண்ட உறுப்பினர் அந்தஸ்து இல்லை. மாறாக, தற்காலிக நியமனமாகவே அது உள்ளது. மக்களவை முக்கிய கட்சியின் தலைவரை முழுநேர உறுப்பினராக நியமிக்கும் வரை தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com