சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு;100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைப்பு: நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் ஜிஎஸ்டி மாற்றம்

பியூஷ் கோயல் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு;100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைப்பு: நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் ஜிஎஸ்டி மாற்றம்

பியூஷ் கோயல் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 9 மணி நேரம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வரி விலக்கு

சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதுக்கு ஆரம்ப காலத்தில் விமரிசனங்கள் எழுந்தது. தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  கல், மார்பிள் மற்றும் மரங்களால் உருவாக்கப்படும் கடவுள் சிலைகள், துடைப்பத்துக்கான மூலப்பொருள்கள், நினைவு நாணயங்கள், செறிவூட்டிய பால் மற்றும் ஆயுஷ்மான பாரத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வரி குறைப்பு

தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. சிறிய டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், பெயின்ட், பெர்ஃபியூம் ,1000 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகள் மற்றும் கைவினை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.  

இந்த புதிய வரி நிர்ணயம் ஜூலை 26 முதல் அமலுக்கு வருகிறது. 

நடுத்தர வர்க்கத்தை கவனத்தில் கொண்டே இந்த மாற்றங்கள் என்று இந்த கூட்டத்துக்குப் பிறகு பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாற்றத்தினால் அரசின் வருவாயில் பெயரளவு தாக்கம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், சரியாக எந்த அளவுக்கு வருவாயில் மாற்றம் வரும் என்று அவர் தெளிவாக கூறவில்லை. 

அசாம் நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை குறைவு மட்டும் மத்திய அரசுக்கு 6,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார். நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், 14,000 முதல் 15,000 கோடி வரை வருவாய் இழப்பு நேரிடும் என்றார்.  

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் சிறு வியாபாரிகள், தொழிமுனைவோர்கள், வணிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com