உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: கே.எம்.ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது கொலீஜியம்

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப்பின் பெயரை கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி: கே.எம்.ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது கொலீஜியம்

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப்பின் பெயரை கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் பி லோக்குர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவின் கூட்டம் தில்லியில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப் பெயரை கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான கே.எம்.ஜோசப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் கடந்த ஜனவரியில் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு, அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் குழுவிடம் தெரிவித்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஏப்ரல் 26, 30 ஆகிய தேதிகளில் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவற்றில், நீதிபதி ஜோசப்பின் பணி மூப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த கடிதங்கள் மிகவும் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப் பொருத்தமானவரா? என்பது தொடர்பாக எந்த பாதகமான அம்சங்களும் இல்லை என்றும் கொலீஜியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2016-இல் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதனால், அவரது பதவி உயர்வுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஜோசப்பின் நியமனத்தில் நிலவும் தாமதம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப் ஆகியோர் கடிதமும் எழுதியிருந்தனர். 
தற்போது அவரது பெயரை மீண்டும் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு இரண்டாவது முறையாக ஒருவரது பெயரை கொலீஜியம் பரிந்துரைக்கும்பட்சத்தில் மத்திய அரசு அதை மறுக்க முடியாது. மாறாக, அதை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்பது 
விதியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com