கட்டித்தழுவிய ராகுல்... தட்டிக்கொடுத்த மோடி..!

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
கட்டித்தழுவிய ராகுல்... தட்டிக்கொடுத்த மோடி..!

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரை கட்டித்தழுவினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.
தனது உரையின் நிறைவாக, காங்கிரஸின் முக்கியத்துவம் குறித்தும், கடவுள் சிவபெருமானின் உண்மைப் பொருள் குறித்தும் எனக்கு நீங்கள் (பிரதமர் மோடி) உணர்த்தியுள்ளீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் என்னை பப்பு' (சிறுவன்) என்று அழைத்த போதிலும், உங்கள் மீது எனக்கு எந்த வெறுப்புணர்வும் இல்லை' என்று கூறிய ராகுல், திடீரென பிரதமர் அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரை கட்டித்தழுவினார். பிரதமர் உள்பட யாரும் எதிராபாராத வகையில் ராகுலின் செயல் இருந்தது. இதனால், பிரதமர் உடனடியாக எழுந்து நின்று எதிர்வினையாற்றவில்லை. பின்னர், சுதாரித்துக் கொண்ட அவர், தனது இருக்கைக்கு திரும்ப முற்பட்ட ராகுலை அழைத்து, அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார். மேலும், சிரித்துக் கொண்டே ராகுலின் காதில் ஏதோ கூறிய மோடி, ராகுலுடன் கைகுலுக்கினார். இதனை, பாஜக உறுப்பினர்களும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் சிரித்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், எனது செயல்தான், ஒரு ஹிந்துவின் அடையாளம்' என்று கூறி அமர்ந்தார். அப்போது, சோனியா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், கரவொலி எழுப்பியும் மேஜையை தட்டியும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது, அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவர் கண் சிமிட்டினார்.
சுமித்ரா மகாஜன் கண்டிப்பு: ராகுலின் செயல்களுக்கு, சிரோமணி அகாலி தள உறுப்பினர் ஹர்சிம்ரத் கௌர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, இது, நாட்டின் நாடாளுமன்றம்; இந்த அவையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் உறுப்பினர்கள் காக்க வேண்டும். அவைக்குள் காங்கிரஸ் தலைவர் நடந்துகொண்ட விதம் முறையானது அல்ல' என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கண்டிப்புடன் கூறினார். 
நாடாளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான நடைமுறையின்போது பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் கட்டித்தழுவியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, வெளிநாட்டுத் தலைவர்களையோ, முக்கிய பிரமுகர்களையோ சந்திக்கும்போது ஆரத்தழுவி வரவேற்பார். அவரது இந்த செய்கை பிரபலமானதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com