செப்.6-இல் இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: இந்தியா அறிவிப்பு

இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தில்லியில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தில்லியில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தை இருமுறை தாமதமான நிலையில், தற்போது மீண்டும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஜுலை 6-ஆம் தேதி அமெரிக்கா சென்று அந்நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால் அந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா கடந்த மாதம் 27-ஆம் தேதியன்றே தெரிவித்துவிட்டது.
அதற்கு முன்பு, இரு நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான இந்தப் பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியாவின் நியமனத்தை, அதிபர் டிரம்ப் அரசு உறுதி செய்வதில் தாமதம் நிலவியதால் பேச்சுவார்த்தையும் தள்ளிப்போனது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசியபோது, இரு நாடுகளின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், பேச்சுவார்த்தையை எப்போது நடத்துவது என பலமுறை தேதிகள் பரிசீலனை செய்யப்பட்டதுடன், இருமுறை ஒத்திவைக்க நேர்ந்தது. இந்நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி தற்போது உறுதியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹீதர் நெளரத் கூறுகையில், இந்திய அமைச்சர்களுடனான சந்திப்பை அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் எதிர்நோக்கியுள்ளனர். உத்திசார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் மேலும் கூறுகையில், இரு நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கூட்டு விருப்பத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இருநாடுகளுக்கு இடையிலான உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதாக அது அமையும்'' என்று தெரிவித்தார்.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 என்ற வகையிலான ஏவுகணையை இந்தியா வாங்குவது குறித்த ஒப்பந்தம் இறுதி நிலையில் இருக்கிறது. ஆனால், ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் இதில் எழுந்துள்ள சிக்கல் குறித்து அந்நாட்டு அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா எடுத்துரைக்கும் எனக் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com