நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கியது.
ஏறத்தாழ 12 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மோடியையும், மத்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். ஆளும் கட்சி தரப்பில் இருந்து உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி பேசத் தொடங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார்.
பின்னர், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். தீர்மானத்துக்கு எதிராக 325 உறுப்பினர்களும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதிமுக உறுப்பினர்கள் 37 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சிவசேனை (18), பிஜு ஜனதா தளம் (19), தெலங்கானா ராஷ்டிர சமிதி (14) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் இல்லை. வாக்கெடுப்புக்குப் பிறகு, அரசுக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
எதிர்மறை அரசியல் வேண்டாம்- மோடி: முன்னதாக, எனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது; எனவே, எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும்' என்று பிரதமர் மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து அவர் மேலும் பேசியதாவது: 
பிரதமர் இருக்கையில் யார் அமர வேண்டும்? இருக்கையில் இருந்து யாரை அகற்ற வேண்டும்? என்பதை இந்த நாட்டின் 125 கோடி மக்கள் முடிவு செய்வார்கள். அதற்குள் என்ன அவசரம்? (மோடியின் இருக்கை அருகே ராகுல் வந்ததைக் குறிப்பிடுகிறார்).
பிரதமர் பதவிக்கு நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமராகும் தனது கனவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார். என்னை ஆரத்தழுவிய பிறகு, இருக்கைக்குச் சென்று அவர் கண்ணடித்ததை நாடே பார்த்து விட்டது. வாக்கு வங்கியை மனதில் வைத்தோ, சிலரை ஆதரிப்பதாகக் கூறியோ நாங்கள் அரசியல் செய்யவில்லை. அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற ஒரே தாரக மந்திரத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகளோ எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். 
டோக்கா லாம் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர்ப்பதற்றம் நிலவியபோது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக ஓரணியில் நின்றது. ஆனால், நீங்கள் (ராகுல் காந்தி) பதற்றமின்றி சீன அதிகாரிகளை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தீர்கள்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஒளிவு மறைவு ஏதுமில்லை. அதில், வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான விவகாரங்களில் (ரஃபேல் ஒப்பந்தம்) சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவிப்பதை (ராகுல்) தவிர்க்க வேண்டும்.
அரசியல் குழப்பத்தை உண்டாக்கி லாபம் அடைவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். அவர்கள் தவறான செய்திகளை உரத்த குரலில் சொல்லி மக்களை தவறான வழியில் நடத்த முயலுகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலை கேலி செய்வது, நமது நாட்டின் ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். நாட்டை இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் துண்டாடியது காங்கிரஸ் கட்சி. அதன் பாதிப்புகளை நாம் இன்னமும் அனுபவித்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் வாராக்கடன் அதிகரித்தது என்றார்.
நேருக்கு நேராகப் பார்க்க முடியாது
எனது கண்களை நேருக்கு நேராக பிரதமரால் பார்க்க முடியவில்லை என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தி பெயரால் அறியப்படுகிறார்; நானோ செயல்களால் அறியப்படுகிறேன்.
உங்களை நேருக்கு நேர் பார்க்கும் துணிச்சல் எனக்கு இல்லை (கிண்டலாகக் கூறுகிறார்). ஏனெனில், சர்தார் வல்லபபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், சந்திரசேகர், பிரணாப் முகர்ஜி, மொரார்ஜி தேசாய், சரத் பவார் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் தலைமையுடன் நேரடியாக மோதினார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அனைவரும் அறிவர்.
காங்கிரஸ் கட்சி தங்களது அகந்தை குணத்தை விட்டிருந்தாலும், மாநிலங்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டிருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு முன்பே சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டிருக்கும். 
ஆந்திரப் பிரதேச மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி விடாது. அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அந்த மாநில மக்களின் நலனுக்கும் மத்திய அரசு உறுதியளிக்கும் என்று மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com