ரஃபேல் ஒப்பந்தம்: பிரதமர் மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் லாபமடைந்துள்ளார் என்று மக்களவையில்
ரஃபேல் ஒப்பந்தம்: பிரதமர் மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் லாபமடைந்துள்ளார் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியால் எனது கண்களை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு: மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதில், ராகுல் காந்தி பேசியதாவது:
பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. பிரதமரின் நெருக்கடி காரணமாக இந்த ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். முதலில், போர் விமானங்களின் விலை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், பின்னர், அந்த விவரங்களை வெளியிடக் கூடாது என்று பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்
அதே நேரத்தில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே எவ்வித ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளார். ஆனால், இங்கு ரஃபேல் தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.
பிரதமருக்கு வேண்டியவர்: பிரதமருக்கும், நமது நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தனது கட்சியை வளர்த்துக் கொள்ளவும் யாரிடம் இருந்தெல்லாம் நிதி பெறுகிறார் என்பதும் நாட்டு மக்களுக்குத் தெரியும். ரஃபேல் ஒப்பந்தத்தால் பிரதமருக்கு வேண்டிய தொழிலதிபர் ஒருவர் ரூ.45,000 கோடி ஆதாயம் அடைந்துள்ளார். 
கண்களை பார்க்க முடியுமா? இப்போது பிரதமர் மோடி லேசாக புன்னகைப்பதை பார்க்க முடிகிறது. அது தர்மசங்கடத்தால் ஏற்படும் புன்னகை. இப்போது பிரதமர் மோடி எனது கண்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊழலைத் தடுக்கும் பாதுகாவலராக மோடி செயல்படவில்லை. அதனை ஒருங்கிணைப்பவராகவே உள்ளார்.
அரசியல் தந்திரங்கள்: தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவதாக பிரதமர் மோடி தேர்தலின்போது வாக்குறுதியளித்தார். இதுதான் அவர்களது போலி அரசியல் தந்திரத்தில் முதன்மையானது. அடுத்ததாக ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறினர். ஆனால், இதுவரை 4 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் உச்சத்தை எட்டியுள்ளது. பெரு நிறுவனங்களின் ரூ.2.5 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை. சீன அதிபரை மோடி பலமுறை சந்தித்துள்ளார். அந்நாட்டுக்கு இரு முறை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட டோக்கா லாம் பகுதியில் சீனா ஆக்கிரமித்தது குறித்து அந்நாட்டு அதிபரிடம் பேசவில்லை என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் நிறுவனம் மீதான முறைகேடு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பாஜக மீதும் மத்திய அரசு மீதும் ராகுல் சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த ராகுலின் இந்த பேச்சின்போது ஆளும் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ராகுல் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசி முடித்தார்.
நிர்மலா சீதாராமன் மறுப்பு


மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில், வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றபோது ராகுல் காந்தி பேசுகையில், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதியே இல்லை என பிரான்ஸ் அதிபர் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக பொய்யான தகவலை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்'' என்றார்.
அப்போது, நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டுப் பேசுகையில், ராகுல் காந்தியின் புகார் முற்றிலும் தவறானது எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது: ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கையெழுத்திட்டார். ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதி அப்போதே ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தது.
ரஃபேல் ஒப்பந்தமே ரகசியத்தன்மை வாய்ந்தது. முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ராகுல் காந்தியிடம் பிரான்ஸ் அதிபர் என்ன தெரிவித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்திய தொலைக்காட்சிகளுக்கு பிரான்ஸ் அதிபர் அளித்த இரு பேட்டிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வர்த்தக விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது'' என பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வர்த்தக ஒப்பந்தங்களை நீங்கள் (இந்தியா) மேற்கொண்டுள்ளீர்கள். சந்தேகமேயின்றி போட்டியாளர்களும் நீங்கள்தான். ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நாங்கள் பகிரங்கப்படுத்த முடியாது'' என்றார் நிர்மலா சீதாராமன்.
பிரான்ஸ் அரசு விளக்கம்
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது:
மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. கொள்முதல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு மற்றும் ரகசியம் காக்க வேண்டும் என்று இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே கடந்த 2008-இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தற்போதைக்கும் பொருந்தும். ரஃபேல் ஒப்பந்தம் மிகவும் முக்கியமான ஒன்று; அதுதொடர்பான ரகசியங்களை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே பிரான்ஸ் அதிபர் இந்திய ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com