வதந்திகள் பரவுவதைத் தடுக்க கட்செவி அஞ்சலில் புதிய கட்டுப்பாடு

வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், ஒரே சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் செய்திகளை பகிர முடியாதவாறு புதிய கட்டுபாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்)
வதந்திகள் பரவுவதைத் தடுக்க கட்செவி அஞ்சலில் புதிய கட்டுப்பாடு

வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், ஒரே சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் செய்திகளை பகிர முடியாதவாறு புதிய கட்டுபாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச அளவில் மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில்தான் செய்திகள், புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவற்றை அதிக அளவில் கட்செவி அஞ்சலில் பகிர்கிறார்கள்.
செய்திகளை 5 நபர்களுக்கு மேல் பகிர முடியாதவாறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம். தற்போது சோதனை முறையில் இருக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செய்திகளை பகிர்ந்துகொள்ளவே கட்செவி அஞ்சல் உருவாக்கப்பட்டது. அதற்கான சேவையை தொடர்ந்து வழங்குவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்செவி அஞ்சலில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனால், அப்பாவி பொதுமக்களை குழந்தை கடத்தல்காரர்கள் என்று எண்ணி அவர்களை அடித்துக் கொலை செய்யும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வதந்திகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில், மத்திய மின்னணுவியல், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கட்செவி அஞ்சல் நிறுவனத்துக்கு உத்தரவு அனுப்பியது.
அதில், கட்செவி அஞ்சல் வழியாக வதந்திகள் பரப்பப்படுவது மிகவும் தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி காக்கும்பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்' என்று எச்சரித்திருந்தது.
தவறான தகவலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து சில தகவல்களை முன்னணி செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரமாக கட்செவி அஞ்சல் கொடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com