விலங்குகளை பாதுகாக்கும் மத்திய அரசு மக்கள் உயிரை பறிக்கிறது: சிவசேனை தாக்கு

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், விலங்குகளை பாதுகாக்கிறார்கள்; ஆனால், மக்களின் உயிரை பறிக்கிறார்கள்' என்ற கடுமையான விமர்சனத்தை சிவசேனை முன்வைத்துள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், விலங்குகளை பாதுகாக்கிறார்கள்; ஆனால், மக்களின் உயிரை பறிக்கிறார்கள்' என்ற கடுமையான விமர்சனத்தை சிவசேனை முன்வைத்துள்ளது.
மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சி, அண்மைக்காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடி வருகிறது.
இந்நிலையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகிய விவகாரங்களை முன்வைத்து, சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா'வில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் மனதில் துளியும் மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது. விலங்குகளை பாதுகாக்க நினைக்கும் அவர்கள், மக்களின் உயிரை பறிக்கிறார்கள். 
பண பலம், அதிகார துஷ்பிரயோகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு ஆகியவற்றின் மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கொள்கையுடன் தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளனர். நாட்டு மக்கள்தான் என்றுமே உயர்ந்தவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். முறைகேடான வழியில் ஆட்சியை பிடிப்பதும் அதில் நீடிக்க விரும்புவதும் ஜனநாயகம் அல்ல. 
மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுறும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். எனினும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்பதற்காகவே அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜக அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த நிலை ஏற்பட்டது ஏன் என்று பாஜக சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
காஷ்மீர் விவகாரம் முதல் மக்களுக்கு நல்ல நாள்கள் வரும் என தாங்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு என்று அந்த தலையங்கத்தில் சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com