காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முயற்சியுங்கள்: மெஹபூபாவுக்கு பாஜக அறிவுரை

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, பாஜகவுக்கு எதிராக பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்குப் பதிலாக, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, பாஜகவுக்கு எதிராக பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்குப் பதிலாக, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கு தனது ஆற்றலையும், நேரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கவீந்தர் குப்தா கூறியுள்ளார்.
 இதுகுறித்து ஜம்முவில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் தனது கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜகவும், மத்திய அரசும் குதிரை பேரம் நடத்துகிறது; பிடிபி கட்சியில் இருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
 மேலும், கட்சியில் இருந்து வெளியேறாவிட்டால், தேசியப் புலனாய்வு அமைப்பின் மூலம் சோதனை நடத்தப்படும் என்று அவர்களை மத்திய அரசு மிரட்டுவதாகவும் மெஹபூபா கூறினார். இதிலிருந்து, அவர் நாட்டின் விசாரணை அமைப்புக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
 அரசியல் தோல்வியால் விரக்தியடைந்து காணப்படும் மெஹபூபா, தேசியப் புலனாய்வு அமைப்பைக் குற்றம் சாட்டுகிறார். அவர் தனது தோல்வியை மூடி மறைப்பதற்காகவும், தனது கட்சி உயிர்ப்புடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கும் எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக உள்ளார்.
 உண்மையில், அவர் தனது சொந்தக் கட்சி எம்எல்ஏக்களை ஓரணியாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டார். இதனால், அவருக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்துகின்றனர். கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய பிறகு, பிடிபி கட்சிக்குள் நடைபெறும் உள்கட்சி மோதல்களுக்கும், பாஜக மற்றும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
 ஆனால், தனது தோல்வியை மறைத்து, பொதுமக்களிடம் இருந்து அனுதாபத்தைப் பெறுவதற்காக, பாஜக மீதும், மத்திய அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இவ்வாறு பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டு விட்டு, ஜம்மு-காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதற்காக, மெஹபூபா தனது நேரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்று கவீந்தர் குப்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com