ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார்: சந்திரபாபு நாயுடு

ஜெயலலிதா இருந்திருந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார்: சந்திரபாபு நாயுடு

ஜெயலலிதா இருந்திருந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
 இது தொடர்பாக தில்லியில்'தினமணி'க்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதற்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு தார்மிக அடிப்படையில் ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
 மாநில உரிமைகளுக்காக ஒரு மாநிலம் போராடும்போது, அதற்கு அண்டை மாநிலம் ஆதரவு அளிப்பதுதானே முறை? தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த நேரத்தில், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.
 ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என நம்புகிறேன். ஏனென்றால், மாநில உரிமைகளில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்படுவதை அவர் அனுமதித்திருக்க மாட்டார். அண்டை மாநிலத்தின் தார்மிகக் குரலுக்கு அவர் ஆதரவளித்திருப்பார்.
 அதேபோல, திமுக தலைவர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தால், மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருப்பார்.
 அண்டை மாநிலங்கள் நட்புறவுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு மீது எனக்கு வெறுப்புணர்வும் இல்லை. ஆனால், அவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஏனென்றால், இன்று ஆந்திரத்துக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கும் நடக்கலாம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com