நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுவாமியின் வாக்குமூலம் பதிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை வாக்குமூலம் அளித்தார். அவர் இந்த வழக்கை தொடுத்தவர் ஆவார்.
 தில்லி பெருநகர நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சமர் விஷால் இந்த வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது, சுவாமியின் பகுதியளவு வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம், அவருடைய மீதி வாக்குமூலமும் பதிவு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான "அசோசியேட் ஜெர்னல்ஸ் நிறுவனம்' மற்றும் அதன் "நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை ஆகியவை நலிவடைந்த நிலையில் இருந்தபோது, தங்களுடைய "யங் இந்தியா' நிறுவனத்தின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி செய்துவிட்டு, பின்னர் அதற்கு சொந்தமான ரூ.90 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 இவர்கள் இருவர் உள்பட, அந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோ டா உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 7 பேரும் தங்களது குற்றத்தை மறுத்து வருகின்றனர்.
 முன்னதாக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியதன் பேரில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகினர். அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
 முறைகேடாக சொத்தை அபகரிப்பது, நம்பிக்கை மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 வோரா மனு: இதற்கிடையே, வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் சுப்பிரமணியன் சுவாமி பகிர்ந்து வருவதற்கு தடை விதிக்க கோரி, தில்லி பெருநகர நீதிமன்றத்தில் மோதிலால் வோரா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com