பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
 மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்து 325 வாக்குகளும், ஆதரவாக 126 வாக்குகளும் கிடைத்தன.
 இதுகுறித்து தில்லியில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 நம்பிக்கையில்லா தீர்மானமானது எங்களது அறநெறிக்கும், பாஜகவின் பெரும்பான்மைக்கும் இடையேயான யுத்தம் ஆகும். இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த பிற எதிர்க்கட்சிகளுக்கு எனது நன்றி.
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாததற்கு, 14ஆவது நிதி ஆணையம் அனுமதியளிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், 14ஆவது நிதி ஆணையமோ, இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த விவகாரத்தில் தங்களை இழுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாததற்கும், பிற வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதற்கும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிதான் காரணம். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியபோது, தம்மை என்னை விட மிகவும் பக்குவப்பட்டவர் எனத் தெரிவித்தார். பிரதமரை விட நான் மூத்தவன் ஆவேன். அப்படியிருக்கையில், அவர் எப்படி இவ்வாறு தெரிவிக்க முடியும்?
 ஆந்திரம், தெலங்கானா ஆகியவைகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆந்திரத்தை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது. இது மிகவும் தவறாகும்.
 காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் பேசியபோது, தாயைக் கொன்றுவிட்டு, பிள்ளையை காப்பாற்றி விட்டதாக தெரிவித்தார். நான் அந்தநிலையில் இருந்தால், தாயையும் காப்பாற்றியிருப்பேன்.
 ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, 2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் சேர்ந்தது. எங்களுக்கு ஆட்சி அதிகார பசி கிடையாது. கேபினட் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதும் இல்லை.
 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்காது. பாஜகவே கூட்டணி தொடர்பாக வேண்டுகோள் விடுத்தாலும், அந்த கூட்டணியில் தெலுங்கு தேசம் சேராது.
 பாஜகவுக்கு எதிராக அனைத்து பிராந்திய கட்சிகளையும் ஓரணியில் தெலுங்கு தேசம் திரட்டும். மத்தியில் அடுத்த ஆட்சியமைவதில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் சந்திரபாபு நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com