பிரபல இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா பணியிடமாற்றம் 

இஸ்ரோவின் கிளைகளில் ஒன்றான, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவியில் இருந்து டாக்டர் தபன் கே மிஸ்ரா நீக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் கிளைகளில் ஒன்றான, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பதவியில் இருந்து டாக்டர் தபன் கே மிஸ்ரா நீக்கப்பட்டுள்ளார்.
 அதற்குப் பதிலாக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தின் ஆலோசகராக தபன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவனின் நேரடி ஆலோசகராக செயல்படுவார் என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 நாட்டின் பிற பகுதிகளின் விண்வெளி ஆராய்ச்சி மைய கிளைகளில் இயக்குநராக இருப்பவர்களே, இஸ்ரோ தலைவராக பெரும்பாலும் பதவி உயர்வு பெறுவர் என்ற நிலையில், தபன் கே மிஸ்ரா-வின் பணியிடமாற்றம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 இவர் இந்தியாவுக்கான உளவு செயற்கைக்கோள்களை தயாரித்து அனுப்பியதன் மூலம் புகழ்பெற்றவராவார். மிஸ்ரா அனுப்பியராடார்சாட் செயற்கைக்கோள்கள் அனைத்தும், இன்றளவிலும் எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் நடவடிக்கைகளை இரவு பகலாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, அடர் மேகமூட்டத்திலும் கூட அவை கண்காணிப்பு பணியை சிறப்புடன் செய்யும் திறன் வாய்ந்தவை.
 மிஸ்ராவின் பணியிடமாற்றம் குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் வெளியிட்ட உத்தரவில், தபன் மிஸ்ரா அவரது பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் ஜுலை 19 பிற்பகல் முதல் விடுவிக்கப்படுகிறார். அவர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உடனடியாக பணியமர்த்தப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இஸ்ரோவின் சொத்துக்கள் பலவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை தபன் மிஸ்ரா கடுமையாக எதிர்த்து வந்ததாக அறியப்படுகிறது. மேலும், செயற்கைக்கோள் மூலமாகவே நாடெங்கிலும் நேரடியாக இணைய சேவைகளை வழங்க வழிவகை செய்யும் செயற்கைக்கோளை ஏவுவதில் நிலவும் கால தாமதத்தையும் மிஸ்ரா எதிர்த்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுபோன்ற சூழ்நிலையில் அவரது பணியிடமாற்றம் நிகழ்ந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதே சமயம், ஆலோசகராக நியமிக்கப்பட்டாலும் மிஸ்ராவின் பதவி உயர்வு எதுவும் தடைபடாது என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 இந்தியாவை கண்காணிக்கும் வகையில், அதிநவீன திறன் வாய்ந்த இரு ரேடார் செயற்கைக்கோள்களை பாகிஸ்தான் அண்மையில் விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com