மழை பாதிப்பு: கேரளத்துக்கு மத்திய அரசு ரூ.80 கோடி நிதி

கேரளத்துக்கு மழை நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.80 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கேரளத்துக்கு மழை நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.80 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்த மாநிலத்தின் பரவலான பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.18 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, 606 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
 இந்நிலையில், கேரளத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான மத்திய குழு, கொச்சிக்கு சனிக்கிழமை வந்தது. அங்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
 கேரளத்துக்கு ரூ.80 கோடி நிதியை வெள்ளிக்கிழமை மத்திய அரசு அளித்தது. மாநில அரசிடமும் குறிப்பிட்ட தொகை உள்ளது. கேரளம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அந்த மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும்.
 இக்கட்டான இந்த சூழ்நிலையில், கேரள மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து இந்த நிலைமையை சமாளிக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணி நடைபெறுகிறது என்றார் கிரண் ரிஜிஜூ.
 மத்திய குழுவுடன், கேரள மாநில பாஜக மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானும் வந்தார்.
 மத்திய குழு, கேரளத்தில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளது.
 முன்னதாக, பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோளின் படி, பேரிடர் மேலாண்மையில் உதவி செய்வதற்காக ஆலப்புழை மாவட்டத்துக்கு 5 குழுக்களை தெற்குப் பிராந்திய கடற்படை அனுப்பியுள்ளது; ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் உள்ளனர். மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை செய்வதற்கு தெற்கு கடற்படை தயாராக உள்ளது என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com