மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸே வெற்றி பெறும்

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸே வெற்றி பெறும்

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தியாகிகள் நினைவு தின பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
 மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும். இதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு, பாஜகவை நமது மாநிலத்தில் படுதோல்வியடைய செய்ய வேண்டும்.
 ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய பேரணிக்கு கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பேரணிக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவி குறித்து நாம் கவலைப்பட கூடாது. நாட்டு மக்கள், நாடு குறித்து மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும் என்றார் அவர். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கு வங்கத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் 90 பேர் காயமடைந்தனர். இதையும் மம்தா பானர்ஜி விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 நிகழ்ச்சிக்கான மேற்கூரையை கூட சரியாக அவர்களால் அமைக்க முடியவில்லை. இந்நிலையில், அவர்களால் எப்படி நாட்டை கட்டமைக்க முடியும்?
 அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பலம் வெகுவாக குறையும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிகார், ஒடிஸா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களின் பாஜகவின் பலம் வெகுவாக குறைந்துவிடும்.
 மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 325 வாக்குகள் கிடைத்தன. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், இந்த எண்ணிக்கை 100ஆக குறைந்து விடும்.
 பாஜக, தலிபான் ஹிந்துத்துவ (ஹிந்து தீவிரவாத) சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால், நாம் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போதித்த ஹிந்துத்துவத்திலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம். தற்போது நாட்டை ஆள்பவர்களின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது.
 நாட்டில் நாள்தோறும் கும்பல் கொலை நிகழ்கிறது. பாஜக மத பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அதிமுக வாக்குகளை பாஜக பெற்றிருக்க முடியாது. பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை இழந்து வருகிறது. அக்கட்சியினர் 2024-ஆம் ஆண்டைப் பற்றிப் பேசுகின்றனர்.
 முதலில் அவர்கள் 2019-ஐ கடக்கிறார்களா என்று பார்க்கலாம். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. தில்லியில் பாஜகவை எதிர்க்க எங்களிடம் ஆதரவு கோரிய காங்கிரஸ், தற்போது எங்களை எதிர்க்கிறது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியாக வரும் ஜனவரி 19-ஆம் தேதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார் மம்தா பானர்ஜி.
 திரிணமூலில் இணைந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
 திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை இணைந்தனர். இதேபோல், பாஜக முன்னாள் எம்.பி. சந்தன் மித்ராவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
 கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி தியாகிகள் நினைவு தின பொதுக் கூட்ட நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி முன்னிலையில், அக்கட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சமர் முகர்ஜி, அபு தாஹர், சபினா யாஸ்மின், அக்ருஸ்மான் ஆகியோர் இணைந்தனர்.
 பாஜகவில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு விலகிய மித்ரா, திரிணமூல் காங்கிரஸில் எந்நேரமும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அவர் சனிக்கிழமை இணைந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com