கர்நாடகத்தில் கன மழை: தமிழகத்துக்கு 82 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 82 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 82 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் இரு மாத காலமாக கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக உள்ளது.
 இதனால் கடலோர கர்நாடகம், தென் கர்நாடகம், வட கர்நாடகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் அதன் முழு கொள்ளளவையும் எட்டி, நிரம்பி வழிகின்றன.
 இதைத் தொடர்ந்து, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் முதல்வர் குமாரசாமி ஜூலை 20-இல் சிறப்புப் பூஜை செய்தார். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மண்டியா, குடகு மாவட்ட நிர்வாகங்கள் அப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப் படி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நொடிக்கு 41,067 கன அடி நீரும், கபினி அணைக்கு நொடிக்கு 30,000 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பைக் கருதி கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நொடிக்கு 52,285 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து நொடிக்கு 30 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
 இரு அணைகளில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 82,285 கன அடி மிகைநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்விரு அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர்முழுமையாக தமிழகத்துக்குத் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com