சத்தீஸ்கரில் காங்கிரஸ் காலாவதியான கட்சி: முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி

"சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது. விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு''
சத்தீஸ்கரில் காங்கிரஸ் காலாவதியான கட்சி: முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி

"சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது. விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு'' என்று முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறவை முறித்துக் கொண்டு, கடந்த 2016-ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறிய அவர், பின்னர் "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
 இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, "காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும் எண்ணம் உள்ளதா?, பாஜகவின் சார்பு அணி எனக் கூறப்படுவது குறித்த கருத்து என்ன?, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைப்பீர்களா?' என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அஜித் ஜோகி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
 பாஜகவின் சார்பு அணியாக இருந்திருந்தால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜ்நந்த்கான் (பாஜக முதல்வர் ரமண் சிங் தொகுதி) தொகுதியில் போட்டியிட நான் முடிவு செய்திருக்க மாட்டேன். சார்பு அணியாக இருந்தால், ஆதாரமற்ற கொலை வழக்கை நான் எதிர்கொண்டிருக்க வேண்டியதில்லை.
 வழிப்பறி செய்ததாக என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க மாட்டாது. கொலை சதி செய்ததாக என் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்காது. நான் மட்டும் சார்பு அணியாக இருந்திருந்தால், இவை எதுவுமே நடந்திருக்காது.
 சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது. அவர்களுக்கு உறுதியான தலைவர் இங்கு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு இலக்கும் இல்லை. எங்களது போட்டியெல்லாம் பாஜகவோடு மட்டும்தான்.
 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது என்றும், புதிய கட்சியை தொடங்குவது என்றும் நான் மிகத் தெளிவாகவே முடிவு எடுத்தேன். ஆகவே, காங்கிரஸýக்கு மீண்டும் திரும்புவது என்பது முடிந்து போன கதை.
 அடுத்த நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குத்தான் மகா கூட்டணி தேவை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அது தேவையில்லை. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி ஏற்படுமோ, இல்லையோ, அது பின்னால் முடிவு செய்யப்பட வேண்டியது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் இணைவது குறித்து பின்னர் சிந்திப்போம். ஆனால், இன்றைய சூழலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதே எங்களது முடிவு என்றார் அஜித் ஜோகி.
 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், சத்தீஸ்கரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால், மதுவை கலாச்சாரமாகக் கொண்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் அஜித் ஜோகி தெரிவித்தார். அவரும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com