தேர்தலுக்காகவே ஜிஎஸ்டி வரி குறைப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,
தேர்தலுக்காகவே ஜிஎஸ்டி வரி குறைப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
 வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுமானால், அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றபோது, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட பொதுமக்கள் பயன்படுத்தும் 88 பொருள்களுக்கு வரியை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே, நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
 மத்திய அரசின் இந்த முடிவு குறித்து சுட்டுரையில் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில்,
 "ஏறத்தாழ 100 பொருள்களுக்கான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. தாமதமாக ஞானம் பிறந்திருக்கிறது. இதே அறிவுரையை கடந்த ஆண்டு ஜூலை மாதமே நாங்கள் முன்வைத்த போது அரசு ஏன் அதை பின்பற்றவில்லை?
 ஜிஎஸ்டி சட்டத்தில் மேலும் பல ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை சரி செய்வதற்கான திறனும், விருப்பமும் இந்த அரசுக்கு இருக்கிறதா என்று நான் சந்தேகப்படுகிறேன்.
 எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் அரசு வரியை குறைக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடந்தால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
 முன்னதாக, கடந்த நவம்பர் மாதம், 28 சதவீத வரி விகித பட்டியலில் இருந்த 228 பொருள்களை, 50 பொருள்களாக குறைப்பதற்கான நடவடிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்டது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வந்த சமயம் அது. அங்கு பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவே வரி குறைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக ப.சிதம்பரம் அப்போது கூறியிருந்தார்.
 நாடாளுமன்றத்தாலும், பொது சிந்தனையாலும் செய்ய முடியாத ஒன்றை குஜராத் தேர்தல் நிகழ்த்தி காட்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com