தேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்; காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல்

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் கூட்டணி: ராகுலுக்கு அதிகாரம்; காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல்

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவர்களும், கமிட்டி உறுப்பினர்களும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 குறிப்பாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்குவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேசிய அளவில் கட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதில் விவாதிக்கப்பட்டது.
 பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற சிந்தனை அரசியல் அரங்கில் துளிர்விடத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில், காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கும் இத்தகைய முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அவற்றில் காரிய கமிட்டியை கூண்டோடு கலைத்தது குறிப்பிடத்தக்க ஒன்று. கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அந்த கமிட்டிக்கு புதிய உறுப்பினர்களை அவர் அண்மையில் நியமித்தார். 18 நிரந்தர உறுப்பினர்களும், 8 சிறப்பு பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்டனர்.
 இத்தகைய சூழலில், அந்த புதிய காரிய கமிட்டியின் முதல் கூட்டம் ராகுல் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா, அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தவிர மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர்களாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என மொத்தம் 239 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 அதில், பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டணி கட்சிகளின் துணையுடன் காங்கிரûஸ வலுப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.
 12 மாநிலங்களில் வலிமை: நாட்டின் 12 மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இருப்பதாகவும், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்தும் வலிமையான இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
 அவரைத் தவிர, ஏறத்தாழ 40 பேர் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசினர். அவர்கள் அனைவரும் ஏகமனதாக ராகுல் காந்தியையே பாஜகவுக்கு எதிரான கூட்டணியின் தலைவராக முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு ராகுலுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 மக்கள் விரோத மத்திய அரசு
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாட்டின் ஜனநாயகத்திலேயே சமரசம் செய்து கொண்டுவிட்டதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தற்போதைய சூழலில் விரக்தியிலும், அச்சத்திலும் ஏழை எளிய மக்கள் உள்ளனர். பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியில் இருந்து சாமானியர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸýக்கு உள்ளது.
 அதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் பக்கபலமாக இருப்போம்.
 மோடியின் அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நாள்கள் எண்ணப்படுகின்றன என்றார் சோனியா காந்தி.
 மோடி அரசின் வெற்று வாக்குறுதி
 விவசாயிகளின் வருவாயை 2022-க்குள் இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது வெற்று வாக்குறுதி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே தென்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 சமூகத்தில் நல்லிணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ராகுல் காந்தி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் எனக் கூறிய மன்மோகன் சிங், மக்களை ஏமாற்றும் நோக்கில் வாக்குறுதிகளை அளிக்கும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
 ஜனநாயகத்தின் மீது பாஜக தாக்குதல்
 இந்திய தேசத்தின் ஒருமித்த குரலாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருவதாக காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலித்துகள், ஏழைகள், சிறுபான்மையினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என ஜனநாயகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் பாஜக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 அதுமட்டுமன்றி, மத்திய பாஜக அரசால் ஒடுக்கப்பட்டிருக்கும் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பதிவிட்டிருப்பதாவது:
 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காரியக் கமிட்டி அனுபவமும், ஆற்றலும் ஒருங்கே பெற்றது என ராகுல் தெரிவித்தார். மேலும், அந்தக் கமிட்டி கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார் என அந்தப் பதிவில் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com