அரைகுறையாக வெளியிட்ட புதிய ஆப்.. பயனாளிகள் தகவல்கள் திருட்டு - ராம்தேவின் பதஞ்சலிக்கு பின்னடைவு

பாபா ராம்தேவ் வெளியிட்ட சுதேசி மெசஞ்சர் செயலி மூலம் பயனாளிகளின் தகவல்கள் எளிதில் திருடப்படும் வகையில் உள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

யோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம்தேவ் நுகர்வோர் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறார். இவர், தனது தயாரிப்புகளை சுதேசி பொருட்கள் என்று கூறி விற்பனை செய்து வருகிறார். இயற்கை மற்றும் சுதேசி என்பதால் இவரது பொருட்கள் நுகர்வோரிடம் அதிகளவில் வரவேற்பு பெற்றது. 

இதையடுத்து, ஆடை தயாரிப்பு, தொலைத்தொடர்பு என பதஞ்சலியை ராம்தேவ் படிப்படியாக விரிவுபடுத்தினார். அதன் ஒருபடியாக கிம்போ எனும் மெசஞ்சர் செயலியை வெளியிட்டார். சமஸ்கிருத மொழியில் கிம்போ என்றால் வாட்ஸ் அப் என்று அர்த்தம். அதனால், வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக இந்த செயலி அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். 

அதற்கான முன்னோட்டமாக அந்த செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இதையடுத்து, 50,000 பயனாளிகள் வரை இதனை பதிவிறக்கம் செய்தனர்.

ஆனால், அத்தனை பேருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவிட்டார். அதில், கிம்போ செயலி பயனாளர்களின் மெசேஜ்களை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். 

மேலும், வாட்ஸ் அப் செயலியுடன் போட்டி போடுவதற்கு முன் தங்களது செயலியை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மற்றொரு ட்வீட்டில் பதிவிட்டார். அந்த ஆராய்ச்சியாளர் இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் எளிதில் திருடப்படும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

பின்னர், இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.   

மேலும், சுதேசி செயலி என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலிக்கு உரிமையாளர் மட்டும் தான் பதஞ்சலி. இந்த செயலியை தயாரித்தது 'அப்டியோஸ்' எனும் அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனம் என்ற தகவலும் அடுத்தகட்டமாக வெளிவந்தது.

இந்த செயலியில் உள்ள விவரங்கள் குறிப்பு மற்றும் இன்ஸ்டால் செய்யும் போது கிடைக்கும் ஒன் டைம் பாஸ்வோர்ட் என அனைத்தும் போலோ மெசஞ்சர் எனும் செயலியில் இருந்து பெறப்பட்டதாகவும் தெரிகிறது. கிம்போ விவரங்கள் குறிப்பும், போலோ மெசஞ்சர் விவரங்கள் குறிப்பும் நகல் எடுத்தது போல் உள்ளது என பயனாளிகள் சிலர் குறிப்பிட்டிருந்தனர். ஒன் டைம் பாஸ்வோர்ட் வரும் போது கிம்போ செயலி என்று இல்லாமல் போலோ மெசஞ்சர் செயலியில் இருந்து வருவது போல் வந்துள்ளது. 

கிம்போ செயலியை தயாரித்த அப்டியோஸ் மென்பொருள் நிறுவனம் தான் இந்த போலோ மெசஞ்சர் செயலியும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பதஞ்சலி மீதான நம்பிக்கை தற்போது பயனாளிகளிடம் முற்றிலுமாக போய்விட்டது.

தற்போது பதஞ்சலி நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு என்று கூறி இந்த செயலியை சரிசெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com