வெளியானது: மருத்துவக் கல்விக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் 

நாடு முழுவதும் மருத்துக் கல்வி பயில்வதற்காக நடத்தப்பட்ட  'நீட்' தேர்வு முடிவுகள் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது
வெளியானது: மருத்துவக் கல்விக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் 

புதுதில்லி: நாடு முழுவதும் மருத்துக் கல்வி பயில்வதற்காக நடத்தப்பட்ட  'நீட்' தேர்வு முடிவுகள் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். 

தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை (செவ்வாய்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இன்றே (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் திங்கள் காலை அறிவித்தார்.இதனால், நீட் தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் எதிர்பாரா திருப்பமாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நிலைமை இவ்வாறு இருக்க 'நீட்' தேர்வு முடிவுகள் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் சற்று முன்பு 12.30 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbscresults,nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com