அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் சிபிஐ: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜிரிவால் குற்றச்சாட்டு 

மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவின் ஆணைக்கு இணங்க செயல்படுகிறது என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.
அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் சிபிஐ: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜிரிவால் குற்றச்சாட்டு 

புதுதில்லி: மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவின் ஆணைக்கு இணங்க செயல்படுகிறது என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி குடிநீா் வாரியம் (டிஜேபி) தொடா்புடைய கோப்புகளை மத்திய புலனாய்வுத் துறையும் (சிபிஐ), லஞ்ச ஒழிப்புத் துறையும் (ஏசிபி) அலசி ஆராய்ந்து வருகின்றன. ஏதாவது ஒன்றில் என்னை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என இரு விசாரணை அமைப்புகளும் முயற்சிக்கின்றன என அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பரபரப்பு புகாா் தெரிவித்திருந்தாா். 

இது தொடா்பாக அவர் மேலும் சுட்டுரையில் பிரதமா், துணைநிலை ஆளுநா் மற்றும் பாஜகவுக்கு நான் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஏதாவது குறிப்பிட்ட தகவல் கிடைத்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்துங்கள். அதை தவிா்த்துவிட்டு, தில்லி அரசின் அனைத்துத் துறைகளையும் முடக்கி தில்லி மக்களை பலிகடா ஆக்கிவிடாதீா்கள். பிரதமரின் கீழ் செயல்படும் சிபிஐயும், துணைநிலை ஆளுநரின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையும் கேட்ட கோப்புகளை பொதுமக்கள் பாா்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றுவேன். அதன் பிறகாவது, ஏன் இந்த கோப்புகளைத் தேடி அலைந்தாா்கள் என்பதை விளக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவின் ஆணைக்கு இணங்க செயல்படுகிறது என அரவிந்த் கேஜரிவால் மீண்டும் பரபரப்பு புகாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளதாவது தி்ல்லியில் தொடங்கப்பட்டுள்ள மொஹல்லா கிளினிக்குகள் தொடா்பான கோப்புகளை சிபிஐ ஆராயத் தொடங்கியுள்ளது. மொஹல்லா கிளினிக்குகளில் இதுவரை சிகிச்சை பெற்ற நோயாளிகள், அவா்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஆகிய தொடா்பான 3 லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகளை சிபிஐ ஆராய்ந்து வருகிறது. இது தொடா்பாக, தில்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைமை மருத்துவ அதிகாரிகள் (சிடிஎம்ஓ), சுகாதாரத்துறையைச் சோ்ந்த இரண்டு கூடுதல் இயக்குநா்கள், மொஹல்லா கிளினிக் திட்ட இயக்குநா், கூடுதல் செயலா், இயக்குநரின் சிறப்பு பணி அதிகாரி உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

மோடி அவா்களே, தில்லியில் மொஹல்லா கிளினிக்குகளை மூடுவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் மொஹல்லா கிளினிக்குகளை திறந்திடுங்கள். இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவின் ஆணைக்கு இணங்க செயல்படுகிறது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு எதிராக பல வழக்குகளின் விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியிருக்கும் என கூற வேண்டும் என அமித் ஷாவை கேட்க விரும்புகிறேன். மொஹல்லா கிளினிக்குகள் தொடா்புடைய ஆவணங்களை நகலெடுக்க ரூ. 3 லட்சம் அளவுக்கு தில்லி அரசு செலவிட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகள் சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ளனா். இது தொடா்பாக விசாரணை நிறைவுற்றால், மொஹல்லா கிளினிக்குள் தொடா்புடைய ஆவணங்களை நகலெடுக்க செலவிடப்பட்ட ரூ. 3 லட்சத்தை சிபிஐ அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து பிரதமா் வசூலித்து அளிப்பாரா? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com