கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் இறந்த குழந்தைகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த மருத்துவர் கஃபீல் கான் சகோதரர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோரக்பூர் பாபா பகவன்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தன. இதற்கு காரணம் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு மருத்துவமனையில் இருந்து நிலுவைத் தொகை செலுத்தவில்லை. அதனால், அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியது. 

இந்த விவகாரத்தில் மருத்துவர் கஃபீல் கான் தனது சொந்த பணத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டு சில குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார். 

ஆனால், அவர் முறையான அனுமதி பெறாமல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி விடுப்பு எடுத்துள்ளார். மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு அவர் செயல்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒருவழியாக அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதன்மூலம் அவர் 8 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். 

அதன்பின் அவர் உருக்கமான ஒரு கடிதம் எழுதினார். 

இந்நிலையில், நேற்று இரவு மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் கோரக்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அவரது கை, தோள் மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த பகுதி உத்தரப் பிரதேச முதல்வர் வீட்டின் அருகில் என்று கூறப்படுகிறது.   

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது பாய்ந்த குண்டுகள் எடுக்கப்பட்ட போதும் அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். 

இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com