ஆளுநர் மாளிகையில் 3-ஆவது நாளாக தொடரும் அமைச்சர்களின் தர்ணா

தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் கேஜ்ரிவால் உட்பட அமைச்சர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
ஆளுநர் மாளிகையில் 3-ஆவது நாளாக தொடரும் அமைச்சர்களின் தர்ணா

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தில்லி அரசு உயர் அதிகாரிகளை உடனடியாகப் பணிக்குத் திரும்ப உத்தரவிடக் கோரி, தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) நீடிக்கிறது. 


இதற்கிடையே, துணை நிலை ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே செவ்வாய்கிழமை காலை சுமார் 11 மணி முதல் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இன்று காலை முதல் துணை முதல்வர் சிசோடியாவும் தில்லி மக்களின் உரிமைக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தில்லி ஆளுநர் மாளிகையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட 4 அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் இருவர் காலவரையற்ற உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் இப்படி ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறை என்று கருதுகின்றனர். 

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் அங்கு காத்திருக்கும் அறையில் உள்ள கழிவறையை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன. அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தேநீர் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.  

தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்கக் கோரியும் துணைநிலை ஆளுநர் அனில் பஜ்யாலை கேஜ்ரிவால் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். பின்னர், தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தில்லி அரசு அதிகாரிகள் சங்கம் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தது. "எந்த அதிகாரியும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இல்லை. அலுவலகங்களில் எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை. பணிகள் வழக்கம் போல நடைபெறுகிறது' என்று அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது. 

இப் போராட்டம் 3-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com